
கரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் 14 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணிவரை அத்தியாவசியக் கடைகளான மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், பூக்கடைகள் ஆகியவை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி தந்துள்ளது அரசாங்கம். இந்த அனுமதியைப் பெரும்பான்மை பொதுமக்களும் வியாபாரிகளும் தவறாகவே பயன்படுத்துகின்றனர். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், முகக்கவசம் சரியாக அணியாமல் பொருட்களை வாங்க வருவது, ஆட்டோக்கள் அடைத்துக்கொண்டு செல்வது என்றிருக்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு எச்சரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது மாவட்ட நிர்வாகம். வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில், நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் உள்ளிட்ட காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரசு அறிவித்த நேரத்தைக் கடந்து முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் இயங்கி வந்த டீக்கடை , ஸ்வீட் கடை, இறைச்சிக் கடை உள்ளிட்ட 7 கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதித்தனர்.

மேலும், முகக்கவசம் அணியாமல் அனாவசியமாக இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களை நிறுத்திய நகரக் காவல்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி, அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, எச்சரிக்கை விடுத்து அனுப்பினார். திருப்பத்தூர் மாவட்டம் மட்டும்மல்லாமல் வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுபோன்று விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது பூட்டி சீல் வைக்கும் அதிரடிகள் அடுத்தடுத்து நடந்தபடியே உள்ளன.