vinayagar chaturthi government chennai high court order

Advertisment

விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி ஊர்வலம் செல்ல முற்படுபவர்கள்மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும்,ஊர்வலமாக எடுத்து செல்லவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அன்பழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஏற்கனவே மகாராஷ்டிரா உள்ளிட்டமாநிலங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துசெல்லவும் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இந்து முன்னணியினர்,ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம் எனத் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர், அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், தடையை மீறி ஊர்வலமாக எடுத்துசென்றால், இந்து முன்னணியின் மூத்த தலைவர் ராமகோபாலன் மற்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரைக் கைது செய்ய வேண்டும் எனறும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு, இன்று (19/08/2020) தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அப்போது, மனுதாரர் தரப்பில், அரசின் தடை உத்தரவை மீறுவோம் என இந்து முன்னணியினர் வெளிப்படையாக மிரட்டல் விடுப்பதாககுற்றம்சாட்டப்பட்டது.

நீதிபதிகள் குறுக்கிட்டு, இதுபோன்ற மிரட்டல்களிலிருந்து அரசைபாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்று தெரிவித்ததுடன், அரசு உத்தரவுகள் மீறப்பட்டால், அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் என்று விளக்கமளித்து, இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகதெரிவித்து, அன்பழகன் வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisment

தடையை மீறி விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிடக்கோரி திருவண்ணாமலையை சேர்ந்த மூத்த மென்பொருள் மேலாளார் இளஞ்செழியன் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி அமர்வு, அன்பழகன் வழக்கில் பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி, இளஞ்செழியன் வழக்கை முடித்துவைப்பதாக உத்தரவிட்டனர்.