vinayagar chaturthi festival tn government announcement

பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "22.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.07.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின் படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் கரோனா தொற்றினால் நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கரோனா நோய் தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின் ஆணைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment