/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vinayagar (1).jpg)
மக்களின் உணர்வைக் கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்குமாறு,தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (20/08/2020) அறிவுறுத்தியது.
கரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளைக் கடலில் கரைக்கவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தடை செய்த உத்தரவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem3_13.jpg)
இந்த வழக்கு,நீதிபதிகள் எம்.எம் சுந்தரஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (20/08/2020) விசாரணைக்கு வந்தபோது, விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருவதாகவும், மக்களின் உணர்வுபூர்வமான விஷயமாக இருப்பதாலும், அரசு இந்த விவகாரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா என, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் அவர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கரோனா தொற்றுச் சூழல் குறித்து தாங்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், சிலையை வைத்து வழிபட்ட பின்,5 அலலது 6 நபர்களுக்கு மிகாமல் பேரிடர் விதிகளைப் பின்பற்றி, பொதுமக்கள் அதனைப் பெரிய கோவில்கள் அருகில் கொண்டு வந்து வைத்து விடுவது, அல்லது தாங்களே சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் வைத்து விடுவது போன்றவற்றை அனுமதிக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா எனக் கேள்வி எழுப்பினர்.
அரசின் விளக்கத்தைப் பெற்று தெரிவிப்பதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், இந்த வழக்கு இன்று (21/08/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மதுரைக் கிளை நீதிமன்றம் இதுபோன்ற வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. மக்களின் தனிநபர் வழிபாட்டிற்கு அரசு தடையோ கட்டுப்பாடோ விதிக்கவில்லை. மேலும், மெரினா கடற்கரை தற்போது தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிறு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. மெரினாவில் சிலைகளைக் கரைத்துவிட்டுச் செல்வதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது? மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதே? கூவம் ஆற்றில்கூட விநாயகர் சிலைகளைக் கரைக்கலாமே? சிலைகளைக் கரைக்க வரும் மக்கள் அங்கேயே தங்கிவிடுவதில்லையே? எனத் தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு, பதிலளித்த அரசு வழக்கறிஞர், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் அரசு என்ன செய்வது? என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில், கடந்த 22-ஆம் தேதியே தமிழக அரசு விநாயகர் ஊர்வலத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. காலம் காலமாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. சிலைகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியாது என மனுதாரர் தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதிகள், விநாயகர் சிலைகளைக் கடலில் கரைப்பதால் எந்த ஒரு தொற்றுப்பரவலும் ஏற்பட வாய்ப்பில்லை. ஊர்வலமாக சிலைகளைக் கொண்டுசெல்ல, சிவசேனாவும் இந்து முன்னணியும் மறுத்துவிட்டன. சாந்தோம் கடற்கரை பகுதியில் சிலைகளைக் கரைக்க தனிநபருக்கு தடையில்லை. கடற்கரையைப் பயன்படுத்துவது, தனிநபர்கள் விநாயகர் சிலையை பூஜை செய்த பிறகு, அருகில் உள்ள கோயில்களுக்கு வெளியேவோ, அல்லது தனிநபராகவோ, சிலைகளை எடுத்துச் சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கலாம். இவை அனைத்தும் கரோனா விதிமுறைகளுக்குள் அடங்கும். மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என உத்தரவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)