Skip to main content

"பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கக் கூடாது" - சென்னை காவல்துறை ஆணையர்!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

vinayagar chaturthi 2021 chennai police commissioner announcement

 

நாளை (10/09/2021) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கரோனா பரவல் காரணமாக, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, பழங்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். 

 

இந்நிலையில், "விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தனி நபர்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட, நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை.

 

தனிநபர்கள் தங்களின் சிலைகளைக் கோயில்களில் வைத்தால் அவற்றைக் கரைக்க அறநிலையத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சென்னை முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றிய காவலர்; நேரில் அழைத்துப் பாராட்டிய கமிஷனர்!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
The policeman who saved the incident victim The commissioner called and praised in person

சென்னை பெருநகர காவல்துறையின் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் இரண்டாம் நிலைக் காவலரான விக்னேஷ் பாண்டி என்பவர் காசிமேடு காவல் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20 ஆம் தேதி மாலை (20.02.2024) மாலை சுமார் 06.30 மணியளவில் காசிமேடு எஸ். என்.செட்டி ரோட்டில் காவல் வாகனத்தில் ரோந்து பணியில் இருந்துள்ளார்.

அச்சமயம் அவ்வழியே நடந்து சென்ற நபர் மீது ஒரு ஆட்டோ மோதியதில் அந்த நபர் நிலைதடுமாறி சாலையில் விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனைக் கண்ட காவலர் விக்னேஷ் பாண்டி சுயநினைவின்றி கீழே விழுந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். இதனால் அவருக்கு சுயநினைவு திரும்பியது. அதன் பின்னர் தன்னுடன் பணியில் இருந்த காவலர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவருக்கு குடிநீர் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் விபத்தில் சிக்கி சுயநினைவின்றி கிடந்தவருக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர் விக்னேஷ் பாண்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “விபத்தில் சிக்கியவருக்கு சி.பி.ஆர். மற்றும் முதலுதவி கொடுத்து ஒரு உயிரைக் காப்பாற்றிய இரண்டாம் நிலை காவலர் விக்னேஷ் பாண்டிக்கு ஒரு பெரிய சல்யூட். காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், காவலர் விக்னேஷ் பாண்டியின் வீரச் செயலைப் பாராட்டினார். விக்னேஷ் பாண்டி உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ -  போலீஸ் கமிஷனர்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Strict action will be taken against those selling products Police Commissioner

சென்னை மாநகரில் கடந்த 7 நாள்களில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 160 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ (DABToP - Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 29.01.2024 முதல் 04.02.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 24 கிலோ மாவா, ரொக்கம் 22ஆயிரத்து 180 ரூபாய், 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 1 இலகு ரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உட்பட சட்டவிரோத பொருட்களை கடத்திவருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.