Skip to main content

கரோனாவிலிருந்து குணமான பிறகும் மருத்துவமனையை விட்டு செல்ல மறுக்கும் மனிதர்!!! 

Published on 05/05/2020 | Edited on 05/05/2020
m

 

டெல்லி பட்டேல் நகரை சேர்ந்தவர் நிதின் சர்மா.  இவர் புதுச்சேரிக்கு வேலை தேடி சில மாதங்களுக்கு முன்பு வந்தவர் அங்கு வேலை செய்யும்போது விபத்தை ஏற்படுத்திவிட்டு அதற்காக சிறைக்கு சென்றுவிட்டு ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த நேரத்தில்தான் கரோனா நோய் பரவல் காரணமாக அரசு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் தனது ஊரான டெல்லிக்கு மீண்டும் செல்வதற்கு வழிதெரியாமல் விழுப்புரத்திற்கு வருகை தந்த சர்மா,  அங்கிருந்து லாரி மூலம் செல்வதற்காக அங்கிருந்த லாரி டிரைவர்கள் சிலருடன் தங்கியிருந்தபோது நோய் பரவல் சம்பந்தமாக வெளிமாநிலத்தவர்களை கண்டறிந்து அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வந்து சேர்ந்த நிதின் சர்மா சில நாட்களுக்குப் பிறகு  அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கை வருவதற்குள் அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு நோய் தொற்று இல்லை என்று கூறி வெளியே அனுப்பி வைத்து விட்டனர்.  பிறகு அவரது மருத்துவ அறிக்கை வந்த பிறகு அவருக்கு நோய் தொற்று உள்ளது என்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ குழு நிதின் சர்மாவை தேடிப்போக அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். 

இதையடுத்து மருத்துவ அதிகாரிகள் போலீசிடம் புகார் அளித்தனர். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஏழு தனிப்படை அமைத்து ஷர்மாவை தேடி வந்தனர்.  ஒரு வாரம் கழித்து செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலை செல்லும் லாரி டிரைவர்கள் ஓய்வெடுக்கும் பகுதியில் நிதின் சர்மா தங்கியுள்ளதை கண்டறிந்த திருநெல்வேலியை சேர்ந்த ஒரு லாரி டிரைவர், விழுப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  அதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஷர்மாவை மிகுந்த பாதுகாப்போடு கொண்டுவந்து மீண்டும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

இந்த நிலையில் ஒரு வார சிகிச்சைக்கு பிறகு சர்மாவுக்கு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது.  மருத்துவமனையை விட்டு செல்லலாம் என்று மருத்துவ அதிகாரிகள் கூறினார்கள்.  ஆனால் நிதின் சர்மா மருத்துவமனையை விட்டு செல்வதற்கு மறுத்து அடம் பிடித்து வருகிறார்.  இதுபற்றி போலீசார் சர்மாவிடம் கேட்டபோது,  நோய் முற்றிலும் குணமான பிறகும் என்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திவைத்தனர். அதன் பிறகும் நோய் தொற்று இல்லை என்று கூறிவிட்டனர். இருந்தாலும் எனது ஊரான டெல்லிக்கு செல்வதற்கு இப்போது எந்த போக்குவரத்து வசதியும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.  மேலும் எனது உறவினர்கள், நண்பர்கள் யாரும் எனக்கு இங்கு இல்லை.

அதனால் மருத்துவமனையை விட்டு வெளியே சென்றால் எனக்கு சாப்பாட்டுக்கும், தங்குவதற்கும் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே போக்குவரத்து வசதி ஏற்படும்வரை என்னை கருணை அடிப்படையில் ஓரிடத்தில் தங்குவதற்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டுமென்று காவல்துறையிடம் மன்றாடி கேட்டுள்ளார் நிதின் சர்மா.  அவரது நிலைமையை புரிந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள் அவர் தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்