p

செஞ்சி அருகே நிலத்தகராறில் தம்பி மற்றும் அவரது மைத்துனரை கத்தியால் குத்திய அண்ணன் மற்றும் அண்ணனின் மகன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து செவ்வாய்க்கிழமை அண்ணனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அண்ணன் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

Advertisment

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணபிள்ளை. இவரது மகன்கள் முத்துகிருஷ்ணன்(48), மற்றும் ஏழுமலை(45) இவர்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. தற்போது நெல் பயிர் வைத்து அறுவடை செய்துள்ளனர். இவர்களுக்குள் நிலத்தின் வழியாக செல்வது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஏழுமலை தனது விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்துள்ளார். பின்னர் நிலத்தில் உள்ள வைக்கோலை ஒரு டிராக்டரில் ஏற்றிக்கொண்டு அண்ணன் முத்துகிருஷ்ணன் நிலத்தின் வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த முத்துகிருஷ்ணனும், அவரது மகன் தங்கமணி (எ) மணிகண்டன்(21) ஆகியோர் ஏழுமலையை வழிமடக்கி ஏன் என் நிலத்தின் வழியாகசெல்கிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் ஏழுமலையை இருவரும் கத்தியால் மார்பில் குத்தினர்.

இதில் ஏழுமலை ரத்தக்காயத்துடன் நிலத்தில் விழுந்தார். வைக்கோல் கட்டிக்கொண்டிருந்த ஏழுமலையின் மைத்துனர் இச்சம்பவத்தை பார்த்து ஓடி வந்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துகிருஷ்ணனும், மணிகண்டனும் ஏழுமலையை கத்தியால் குத்தியதை போன்று இவரையும் மார்பில் கத்தியால் குத்தினர்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு மோட்டார் சைக்கிளில் செஞ்சி அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர் இருவரும் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பின்னர் இருவர் உடலும் உடல் கூறு ஆய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏழுமலையின் மனைவி மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துகிருஷ்ணனின் மகன் மணிகண்டனை தேடி வருகின்றனர்.

இறந்த ஏழுமலைக்கு மனைவி மகாலட்சுமி மற்றும்2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இறந்த இவரது மைத்துனர் முருகனுக்குமனைவி மட்டும் உள்ளார். குழந்தைகள் இல்லை.

இரட்டை கொலை நடந்த இடத்தில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது செஞ்சி டிஎஸ்பி.நீதிராஜ், கஞ்சனூர் ஆய்வாளர் ஜீவராஜ்மணிகண்டன், செஞ்சி தனிப்பிரிவு காவலர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.