Viluppuram court order Life sentence

விழுப்புரம் அருகில் உள்ள நன்நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசீலன்(38). அதே பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(36). இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். ஒருநாள் இருவரும் மது அருந்திக் கொண்டிருக்கும்போது அஜித், மேலும்வாங்கி தரும்படி கேட்டுத்தொந்தரவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதில் ஆத்திரமடைந்த தனசீலன், அஜித்தை தாக்குவதற்கு துரத்தி சென்றுள்ளார். அப்போது அஜித் ஓடி மறைந்து விட்டார். இதை மனதில் விரோதமாக வைத்துக் கொண்டு இருந்த அஜித்குமார் 2009ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தனசீலன் வீட்டிற்குள் தனியாக இருந்த போது உள்ளே நுழைந்து உருட்டுக்கட்டையால் அவரது பின் மண்டையில் தாக்கியுள்ளார். இதில், நிலை தடுமாறி விழுந்த அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்திப் படுகொலை செய்துள்ளார் அஜித்.

Advertisment

இது சம்பந்தமாக தனசீலன் மனைவி எழிலரசி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பூர்ணிமா நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில் கொலை குற்றவாளி அஜித்திற்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும், அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த குற்றத்திற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் 1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட அஜித் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டுள்ளார்.