Viluppuram

Advertisment

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 51 பேர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டது. இவர்களில் 38 பேர் விழுப்புரம் நகரத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து நோய் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகளானலட்சுமி நகர், கந்தசாமி லேவுட், கேகே ரோடு, ரஹீம் லேவுட், பாணம் பட்டு, என்ஜிஓ காலனி, சாலாமேடு, கமலா நகர், அகரம் பேட்டை, திடீர் குப்பம், முத்தோப்பு ஆகிய பகுதிகளை ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அப்பகுதி மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் தீவிர கண்காணிப்பிலிருந்து வருகிறார்கள். அப்படி இருந்தும் விழுப்புரம் நகரில் நோய்தொற்று பரவியவர்கள் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டே சென்றதையடுத்து விழுப்புரம் நகரத்தை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு தனித்தீவாக மாற்றப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகருக்குள் நுழையும் எல்லைகளாக உள்ள கோலியனூர் கூட்டுரோடு, முத்தாம்பாளையம் மாம்பழப்பட்டு சாலைகள், ஜானகி புறம் புறவழிச்சாலை, விழுப்புரம் செஞ்சி புறவழிச்சாலை ஆகிய இடங்களில் போலீசார் மரக்கட்டைகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

Advertisment

இதனையும் மீறி நகருக்குள் நுழைவதற்கு தெருக்கள் வழியாக புகுந்து வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அப்படி வருபவர்களை தடுத்து நிறுத்துவதற்க்காக 40க்கும் மேற்பட்ட தெருக்களில் தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து நகருக்குள் யாரும் உள்ளே நுழையாத அளவிற்கு மிகுந்த பாதுகாப்பும், கட்டுப்பாடும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறும்போது, கரோனா பாதிப்பு காரணமாக விழுப்புரம் நகரம் முழுவதும் தனிமைபடுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து வெளி மாவட்டங்களில் இருந்தும் நகருக்குள் வருபவர்கள் அனைவரையும் கடுமையான பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விழுப்புரம் நகரம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வெளிவரும்போது முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தி கூறி வருகிறோம் என்கிறார்.

மேலும் விழுப்புரத்தை தனிமைப்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக விழுப்புரம் நகருக்குள் யாரும் வராத அளவிற்கு நகரத்திற்கு வெளியே காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோன்று நகருக்குள் நுழையும் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து தடுக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட பல்வேறு ஆலோசனைகளை சமூகநல ஆர்வலர்களும், பத்திரிகை நண்பர்களும் அதிகாரிகளிடம் ஏற்கனவே பலமுறை எடுத்துக் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இப்போதைய செயல்பாடுகளை இன்னும் சில வாரங்களுக்கு முன்பே செயல்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கிராமத்து மக்கள் நகருக்குள் வராமல் பாதுகாக்கப்பட்டு வந்தது நோய் பரவாமல் தடுப்பதற்காக, ஆனால் இப்போது சென்னை கோயம்பேட்டிலிருந்து வந்த விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கிராமத்திலிருந்து நகரத்திற்கு,நகரத்திலிருந்து கிராமத்திற்கு செல்லாமல் தடுக்க வேண்டிய கட்டாய நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.