ADVERTISEMENT

சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு; தீக்குளிக்க முயன்ற விவசாயி

02:45 PM May 11, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரு வழிச் சாலைகளாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையில் நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சேரி அருகே உள்ள மதகடிப்பட்டு பகுதியில் உள்ள கெராம்பாளையம் கிராமப் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அந்த இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது என்று அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுங்கச்சாவடி அமையும் இடம் கெங்கராம்பாளையம் பகுதியில் அமைய உள்ளதை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சத்தியமூர்த்தி என்பவர் பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.

அதில், அப்பகுதியில் சாலையை ஒட்டி தனக்கு ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. அதேபோல் பல விவசாயிகளுக்கும் நிலம் உள்ளது. நிலத்திற்கு எதிரே சுங்கச்சாவடி அமைத்தால் சுற்றுச்சூழல் காரணமாக விளைநிலம் பாதிக்கப்படும். மேலும் விளைநிலத்தில் இருந்து சாகுபடி செய்யப்பட்ட தானியங்களை எடுத்து கொண்டு செல்வதற்கு இடையூறுகள் ஏற்படும். எனவே தங்கள் பகுதி நிலத்திற்கு எதிரே சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது என்று பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் அவரது மனுவை நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மேலும், சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் மட்டும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டித்து விவசாயி சத்தியமூர்த்தி நேற்று பகல் 12 மணி அளவில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இது குறித்து வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் விழுப்புரம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் உள்பட பல்வேறு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். விவசாயி சத்தியமூர்த்தி மற்றும் பிற விவசாயிகளை சந்தித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயி சத்தியமூர்த்தி தீக்குளிப்பு போராட்டத்தை கைவிட்டார். அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகள் கூறியதை கேட்டு நம்பிக்கையுடன் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT