villupuram north street man incident police investigation started 

Advertisment

விழுப்புரம் நகராட்சியில் உள்ள வடக்கு தெருவைச்சேர்ந்தவர் இப்ராஹிம் (வயது 45). இவர் விழுப்புரம் காந்தி வீதியில் உள்ள ஒரு அங்காடியில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வந்த இவர் நேற்று மாலை ரம்ஜான் நோன்பு இருப்பதற்காக பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு வாலிபர்கள் ஒரு பெண்ணை துரத்தி தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்டு இப்ராஹிம் மனம் பொறுக்காமல் ஏன் பெண்ணிடம் தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இவரைப் போலவே அங்கு நின்றிருந்த தீபக் என்ற வாலிபரும் அந்தப் பெண்ணிடம் தகராறு செய்தவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். அந்த வாலிபர்கள், தங்களைத் தட்டிக் கேட்ட இப்ராஹிம் வயிற்றிலும் தீபக் முகத்திலும் கத்தியால் குத்தியுள்ளனர். இதைக் கண்டு அப்பகுதியில் இருந்த கடைக்காரர்கள் பொதுமக்கள் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கத்தியால் குத்தி விட்டுத்தப்பி ஓட முயன்ற இந்த இரண்டு வாலிபர்களை அப்பகுதி கடை ஊழியர்கள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். உடனடியாக அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் டவுன் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த இப்ராஹிம் மற்றும் தீபக் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இப்ராஹிம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கத்தியால் குத்திய இரண்டு வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் விழுப்புரம் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் என்பவரது மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில், ராஜசேகரின் தந்தை ஞானசேகரன் என்பவருக்கும் இவர்கள் இருவரும் துரத்தி தாக்குதல் நடத்திய அந்த பெண்ணுக்கும்இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும் இதை அறிந்த அவரது மகன்கள் ராஜசேகர்மற்றும் வல்லரசுஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை கடைவீதியில் மறித்து தகராறு செய்து அடித்து உதைக்க துரத்திச் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் மிரண்டு ஓடியபோது தான் இப்ராஹிம் மற்றும் தீபக் ஆகிய இருவரும் ஏன் தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளனர்.

Advertisment

இதற்கிடையில், தகராறு நடப்பதைப் பார்த்துபயந்தஅந்தப் பெண் பல்பொருள் அங்காடியில் ஓடி ஒளிந்துள்ளார். அங்காடிக்குள் புகுந்த ராஜசேகர்,வல்லரசு ஆகிய இருவரும் அந்த பெண்ணை தாக்கினர். அதை இப்ராஹிமும் தீபக்கும் தடுத்தபோது தான் அவர்கள் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் சென்று விசாரணை நடத்தினார். பிடிபட்ட ராஜசேகர்,வல்லரசு ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் மேற்கு காவல்நிலையபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜசேகர் வல்லரசு இருவரும் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் நகர வியாபாரிகள் இன்று கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளனர். கடைவீதியில் நடைபெற்றஇச்சம்பவம் விழுப்புரம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.