Skip to main content

கணவர் சஸ்பெண்டானதால் தற்கொலைக்கு முயன்ற மனைவி

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

villupuram  incident police inspector suspended issue 

 

போலீஸ் இன்ஸ்பெக்டரான தனது கணவரை சஸ்பெண்ட் செய்ததற்காக மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கடந்த 23ஆம் தேதி சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மரியநாதன் மகன் ராஜா தற்கொலை செய்து கொண்டார். ராஜாவும் அவரது நண்பர்களும் அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் வீட்டின் எதிரே அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். இதை மூர்த்தி கண்டித்துள்ளார். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இரு தரப்பினரும் கிடார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து மூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில்தான் ராஜா தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் மூர்த்தி என்று போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

 

இதற்கிடையே விழுப்புரம் நகரை ஒட்டி உள்ள மாம்பழப்பட்டு சாலை பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் ராஜாவும் காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி உள்ளனர். இதற்கு ராஜாவின் தந்தை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே ராஜா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி காதலன் பிரிவைத் தாங்க முடியாத திருநங்கையும் தற்கொலை செய்துகொள்ள முயன்று தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த வாக்குமூலத்தில், "தங்களது காதலுக்கு ராஜாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் ராஜா தற்கொலை செய்து கொண்டதாக" திருநங்கை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் முறையாக விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறி இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் சுதா ஆகிய இருவரையும் விழுப்புரம் சரக டிஎஸ்பி  பாண்டி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கரின் மனைவி, "தனது கணவர் ஜெய்சங்கர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவரைப் பழிவாங்கும் நோக்கத்தோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதை வாபஸ் பெற வேண்டும்" என்று கூறி நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது மகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த அவரது கணவர் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தனது மனைவியை கட்டாயப்படுத்தி காரில் அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். அப்போது இன்ஸ்பெக்டர் மனைவி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, "தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி அவரிடமிருந்து கத்தியை பறித்துள்ளனர். அதன் பிறகு இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தனது மனைவியை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்