vvv

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ளது தாதாம் பாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 30 வயது கலியபெருமாள். எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் இவருக்கும் புதுவை மாநிலம் அறியூரை சேர்ந்த பிரேமா என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சேர்ந்து திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இவர்களுக்கு தற்போது ஆறுமாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணமான சில மாதங்களுக்கு பிறகு கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது சண்டை சச்சரவுகள் நடந்து வந்துள்ளன.

Advertisment

உறவினர்கள் இருவரையும் அவ்வப்போது சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கலியபெருமாள் மனைவி பிரேமாவிடம் அவரது பெற்றோரிடம் சென்று வரதட்சனை கேட்டு வாங்கி வருமாறு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பிரேமா சமீபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஊர் முக்கியஸ்தர்கள் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி நேற்று முன்தினம் பிரேமாவை கணவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

Advertisment

இப்படிப்பட்ட நிலையில் மது போதையில் வீட்டிற்கு வந்த கலியபெருமாள் மனைவியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கலியபெருமாள் வீட்டின் அருகில் கிடந்த உலக்கையை எடுத்து மனைவி பிரியாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரேமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கலியபெருமாள் மாமியார் வீட்டுக்கு போனில் தகவல் தெரிவித்துவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த ஊர் மக்கள் உடனடியாக வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து போலீசார் விரைந்து வந்து கலியபெருமாளை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

பிரேமாவின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து வளவனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் மனைவியை உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.