
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி ரமா (வயது 45). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி தங்களுக்குச் சொந்தமான மாடுகளை வயல்வெளி பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதே ஊரைச் சேர்ந்த வக்கீல் என்கிற முருகன், ராஜேந்திரன் மற்றும் சீனிவாசன் ஆகிய மூன்று பேரும், ரமா கழுத்தில் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டி, மூவரும் ரமாவிடம் சென்று பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தனர். தங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால் ரமா எவ்வித தயக்கமும் இன்றி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் சீனிவாசன், தான் வைத்திருந்த மண்வெட்டியால் ரமாவின் முகத்தில் வலது பக்கம் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் ரமா நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே வடிவேல், ராஜேந்திரன், சீனிவாசன் மூவரும் ரமாவை பக்கத்தில் இருந்த கரும்பு தோட்டத்திற்கு தூக்கிச் சென்றனர். மயக்க நிலையில் இருந்த ரமாவை மூவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர். மூவரும் ரமா அணிந்திருந்த கம்மல், தாலிச் செயின் உட்பட மூன்று பவுன் நகைகளைக் கழட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். ரமாவை காணாத அவரது குடும்பத்தினர் அவர் மாடு மேய்த்த பகுதிகளில் தேடிப் பார்த்தபோது., கரும்பு வயலில் ரமா பிணமாக முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்து கிடப்பதைப் வடிவேலு என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ரமாவின் உறவினர் தெய்வசிகாமணி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் முருகன், ராஜேந்திரன், சீனிவாசன் ஆகிய மூவரும் சம்பவத்தன்று அதே ஊரைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் இறந்த நிலையில் அவரது சடலத்தை சுடுகாட்டில் புதைப்பதற்கான பணியை மூவரும் செய்ய சுடுகாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து மண்வெட்டியுடன் வீட்டுக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது தனியாக இருந்த ரமாவின் கழுத்தில் இருந்த நகைக்காக மூவரும் கொலை செய்ததை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்தது. நீதிபதி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், "குற்றவாளிகள் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்" என்று தீர்ப்பில் தெரிவித்தார். சிறைத் தண்டனை பெற்ற மூன்று பேரையும், போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக சங்கீதா ஆஜராகி இருந்தார். மூன்று பவுன் நகைக்காக அப்பாவி பெண்ணை கொலை செய்த மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.