villupuram district police raid two persons arrested

விழுப்புரம் மாவட்டம், வண்டிமேடு பகுதியில் தாலுகா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். மேலும் அவரது உருவத்தைப் பார்த்ததும், இவரை எங்கோ பார்த்ததாக காவல்துறையினருக்கு ஞாபகம் வர உடனே காவல்துறையினர் சாப்ட்வேர் செயலியில் அவரைப் பற்றி தேடியுள்ளனர்.

Advertisment

அதில், அந்த நபர் கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த 44 வயது பிரேம் என்பதும், இவர் தற்போது விழுப்புரம் வண்டி மேடு பகுதியில் உள்ள புண்ணியமூர்த்தி மகன் புகழேந்தி (வயது 22) என்பவரது வீட்டில் தங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இவர் மீது விழுப்புரத்தில் ஏற்கனவே 2 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, காவல்துறையினர் பிரேமை புகழேந்தி வீட்டிற்கு அழைத்து சென்று, அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர்.

Advertisment

அங்கு 4.5 கிலோ கஞ்சா மற்றும் குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு உள்ளிட்ட 9 பித்தளை விளக்குகள் மற்றும் பூஜைக்கான சாமான்கள் சிறிய அளவிலான சாமி சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் சாமி சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பிரேம் மற்றும் புகழேந்தி இருவரையும் தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, காவல் நிலையத்திற்கு விரைந்து வந்து பிடிபட்ட இருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தினார். அதில் கேரளாவைச் சேர்ந்த பிரேம் திருப்பதியில் கஞ்சா வாங்கிக்கொண்டு, அதை பேருந்தில் எடுத்து வந்து விழுப்புரம் நகரில் விற்பனை செய்ததும், அவருடன் புகழேந்தியும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அதனைத்தொடர்ந்து, விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பிரேம், புகழேந்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பிரேமிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் திருடப்பட்டதா, அது எப்படி அவரிடம் வந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இளைஞர்கள் மத்தியில் கஞ்சாப் பழக்கம் அதிகரித்து வருகிறது. காரணம் அண்டை மாநிலங்களில் உள்ள கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு மேற்படி மாவட்டத்திலுள்ள பலர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு, அதை இளைஞர்களுக்கு விற்பனை செய்து அவர்களை சீரழித்து வருகிறார்கள். எனவே, கஞ்சா வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.