
தமிழகத்தில் சமீப காலங்களில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்து வருபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் ரயில்வே படை சிறப்பு போலீசார் போதை பொருட்கள் கடத்தலை தடுக்கும் விதமாக தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது மூன்று நபர்கள் கையில் பைகளுடன் சந்தேகப்படும்படி வந்துள்ளனர். அவர்களை போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் மூவரும் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தற்போது புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 920 பாக்கெட்டுகளில் சுமார் ஐந்து கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 25 கிலோ குட்கா புகையிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கஞ்சா சாக்லேட் 100 ரூபாய் என்று விற்பனை செய்து வந்துள்ளனர்.
கஞ்சா சாக்லேட் மற்றும் குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். கஞ்சா சாக்லேட் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டார்.