villupuram  district  22 year boy  incident  police investigation started 

விழுப்புரம் மாவட்டம், சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மரியநாதன் என்பவரின் மகன் ராஜா (22). இவர் கடந்த 21 ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசித்துவரும் மூர்த்தி என்பவர், ராஜா மற்றும் அவரது நண்பர்களை பார்த்து "நீங்கள் திருட வந்தவர்களா?" என்று கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் கிடார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜா, கடந்த 23ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு காரணம் மூர்த்தியுடன் ஏற்பட்ட தகராறு தான் என்று கூறி ராஜாவின் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ராஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக மூர்த்தி, அவரது நண்பர் மோகன் ஆகியோர் மீது கிடார் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் வசித்து வந்த 19 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அருகில் இருந்த திருநங்கைகள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநங்கையிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், சூரப்பட்டு ராஜாவும் திருநங்கையும் காதலித்து வந்ததாகவும், ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த திருநங்கை அவரது உடலை பார்ப்பதற்கு சூரப்பட்டு கிராமத்திற்கு சென்றுள்ளதாகவும், அங்கு ராஜாவின் உறவினர்கள் திருநங்கையை ராஜாவின் உடலை பார்க்க விடாமல் திருப்பி அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட திருநங்கை தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சக திருநங்கைகள் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட ராஜா 22 ஆம் தேதி பகல் இரண்டு மணி அளவில் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறி சிகிச்சை பெற்றுள்ளார். பிறகு அதே இரவு 2 மணி அளவில் விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற ராஜா, கடந்த 21ஆம் தேதி தன்னை சூரப்பட்டு திருமண மண்டபம் எதிரில் மர்ம நபர் ஒருவர் வழிமறித்து தாக்கியதாக கூறி சிகிச்சை பெற்றுள்ளார். 24 மணி நேரத்திற்குள் இரண்டு மருத்துவமனைகளில் இரண்டு விதமான காரணங்களை கூறி ராஜா சிகிச்சை பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜா, மூர்த்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது திருநங்கை மீது கொண்ட காதலை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்த காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராஜா உயிரிழப்புக்கு நஷ்ட ஈடு கேட்டு அவரது உறவினர்கள் ராஜாவின் உடலை வாங்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.