villupuram

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ளது நல்லாம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர் அய்யனார் (வயது 35). இவருக்கு முனியம்மாள் என்ற தாயும், தனம் என்ற மனைவியும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜீவா (11 வயது) என்ற மகனும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு அருகில் உள்ள சாலையோர பாலத்தில் இருந்து அய்யனார் தவறி விழுந்துள்ளார். இதனால் இவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு உதவியாக அவரது தாய் முனியம்மாள், மனைவி தனமும் இருந்து வந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் கடந்த வாரம் மருத்துவமனையிலிருந்து அய்யனாரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டில் அவரைதங்க வைத்து அவரது மனைவியும் தாயாரும் உடன்இருந்து கவனித்து வந்துள்ளனர். இந்தநிலையில் இவர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தங்கியிருந்தபோது ஐயனாரின் மனைவி தனம், தாயார் முனியம்மாள் ஆகிய இருவருக்கும் கரோனா நோய் தொற்று இருப்பதாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.

Advertisment

இதையடுத்து கடந்த எட்டாம் தேதி கண்டாச்சிபுரம் காவல்துறையினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி குழுவினர் நல்லாம்பாளையம் வந்து அய்யனார் தாயார், மனைவி ஆகிய இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். தாயாரும், மனைவியும் இல்லாததால் பதினோரு வயது மகன் ஜீவா மட்டும் உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் ஐயனார் கடந்த எட்டாம் தேதி இரவு உயிரிழந்தார்.

இந்த தகவல் அய்யனாரின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அய்யனாரின் இறுதிச் சடங்கை செய்து அடக்கம் செய்துள்ளனர். அய்யனாரின் இறப்பில் கூட இருந்து அவரது உடலை அடக்கம் செய்யக்கூட முடியாமல் அவரது மனைவி தனம், தாயார் முனியம்மாள் ஆகியோரை இந்த கொடிய கரோனா பிரித்து வைத்து விட்டது.

Advertisment

இந்தத் தகவல் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பொன்முடிக்கு தெரியவரவே, அவர் அய்யனாரின் இறுதி சடங்கிற்காக ரூபாய் பத்தாயிரம் உதவித்தொகையை முகையூர் ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் காணை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மூலம் கொடுத்தனுப்பியுள்ளார். அவர்கள் இந்த தொகையை, அய்யனாரின் மகன் ஜீவாவிடம் ஒப்படைத்தனர். அந்தக் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ பொன்முடி தனதுஆறுதலையும் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். ஏழை குடும்பத்திற்கு திமுக எம்எல்ஏ அளித்த பத்தாயிரம் ரூபாய் உதவியாக அமைந்துள்ளது. ஆதரவற்ற இந்த குடும்பத்திற்கு தமிழக அரசும் உதவி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர் இறந்துபோன அய்யனாரின் உறவினர்களும், அவ்வூர் மக்களும்.