villupuram child incident chennai high court police

Advertisment

விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையைச் சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ, தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அ.தி.மு.க. பிரமுகர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 10- ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரையில் கடை நடத்தி வந்த ஜெயபால் மீதிருந்த முன்விரோதம் காரணமாக, பத்தாம் வகுப்பு படித்துவந்த அவரது மகள் ஜெயஸ்ரீ என்ற சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர்கள் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும், வீட்டில் தனியாக இருந்தபோது, கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து எரித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த சிறுமி ஜெயஸ்ரீ, இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலத்தில், முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும், தந்தை மீதிருந்த முன்விரோதம் காரணமாக, தன்னை தீவைத்து எரித்ததாகத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, முருகன் மற்றும் கலியபெருமாள் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டு, அவர்களை திருவெண்ணெய் நல்லூர் போலீசார் கைது செய்த நிலையில், கடந்த மே மாதம் 30- ஆம் தேதி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Advertisment

அதன்படி இருவரும் தற்போது கடலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முருகனின் மனைவி அருவி மற்றும் கலியபெருமாளின் மனைவி சவுந்தரவள்ளி ஆகிய இருவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

மனுவில், ஆதாரங்கள் இல்லாமல், உள்நோக்கத்துடன் தங்கள் கணவர்கள் இவ்வழக்கில் சேர்க்ககப்பட்டுள்ளதாகவும், வழக்கின் ஆவணங்கள் தங்களுக்குத் தமிழில் தரப்படவில்லை என்றும், இருவரும் தானாகவே முன்வந்து சரணடைந்த போதும், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தது போல திரித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல, முருகனின் மனைவி, அவரது செல்போன் அழைப்பு விவரங்களையும், காவல் நிலையத்தின் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும், உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டுமென, தனியாகக் கோரியுள்ளார்.

தங்களின் கணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, அவர்கள் மீது பிறப்பித்த குண்டாஸ் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு, இன்று (01/07/2020) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பாக வக்கீல் எஸ். சரவணகுமார் ஆஜராகி, மனுவுக்கு பதில் அளிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

Advertisment

http://onelink.to/nknapp

இதைக் கேட்ட நீதிபதிகள், மனு குறித்து உள்துறைச் செயலர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கடலூர் சிறைத் துறை கண்காணிப்பாளர் மற்றும் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்குத் தள்ளி வைத்தனர்.