/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art hand cop_12.jpg)
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள சத்தியகண்டனூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது45). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டைப்பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தனது உறவினர் ஊருக்குச் சென்றிருந்தார். அன்று இரவு 11 மணி அளவில் ஊரிலிருந்து வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திவேல் உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் இருவர் அவரது வீட்டிலிருந்த பீரோவில் பணம் நகை ஆகியவற்றைத் திருடிக் கொண்டு ஓடத்தயாரானார்கள். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் கத்தி கூச்சல் போட்டனர். அவர்களது கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் ஓடி வந்து கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றனர்.
அதில் ஒரு கொள்ளையன் 30 ஆயிரம் பணத்துடன் தப்பி ஓடித்தலைமறைவாகி விட, மற்றொருவரைப் பொதுமக்கள் சுத்தி வளைத்துப் பிடிக்க முயன்றபோது,தான் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டால் அவர்களிடமிருந்து தப்பிச் செல்லத்தயாராக வைத்திருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து பொதுமக்கள் மீது தூவி விட்டுத்தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளான். அப்போது சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள் கொள்ளையன் வைத்திருந்த மிளகாய்ப் பொடியைப் பிடுங்கி அவன் முகத்தில் தூவினார்கள். மிளகாய்ப் பொடி திருடன் முகத்தில் விழுந்ததால் கண்கள் எரிச்சல் தாங்காமல் துடித்துக் கொண்டிருந்த கொள்ளையனை பொதுமக்கள் பிடித்துப் பலமாகத்தாக்கியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்குத்தகவல் அளித்தனர். போலீசார் கொள்ளையனை கைது செய்து அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விழுப்புரம் அருகே உள்ள நேமூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பராயன் என்பவரது மகன் முனுசாமி (வயது20) என்பதும், பணத்துடன் தப்பிஓடியவன் அதே ஊரைச் சேர்ந்த துரை (வயது40) என்பதும் தெரியவந்தது. திருடன் முனுசாமி கண்ணில் மிளகாய்ப் பொடி பட்டதால் கண் எரிச்சல் ஏற்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருந்த அவனை உடனடியாக திருக்கோவிலூரில் உள்ள கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பணத்துடன் தப்பி ஓடிய கொள்ளையன் துரையை போலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)