Skip to main content

தமிழக அரசால் மூடப்பட்ட அரசுப் பள்ளி... போராடி மீண்டும் திறந்து வைத்த கிராம மக்கள்!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

 

தமிழ்நாட்டில் குறைந்த மாணவர்களை கொண்ட அரசுப் பள்ளிகளில் மீண்டும் மாணவர்களை சேர்த்து பள்ளிகளை தொடர நினைக்காத அரசு. அந்தப் பள்ளிகளை மூடும் திட்டத்திற்கு வந்துவிட்டது. அரசின் முடிவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மூடப்படும் அரசுப் பள்ளிகளில் பொது நூலகம் திறக்கப்படும் என்றும், மூடப்படும் நிலையில் உள்ள பள்ளிகளில் மீண்டும் மாணவர்கள் சேர்க்கப்படும் பட்சத்தில், அந்த பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சர் அறிவித்தார். 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சுமார் 45 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு நூலகம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியது. அதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மற்றும் ஆவுடையார்கோயில் ஒன்றியம் சின்னபட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளும் மூடப்பட்டு நூலகம் திறக்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குளத்தூர் தொடக்கப்பள்ளி கடந்த ஆகஸ்ட் 9- ந் தேதி வெள்ளிக் கிழமை காலையுடன் அதிகாராப்பூர்வமாக மூடப்பட்டுவிட்டது.  இந்த தகவல் அறிந்து பத்திரிகை நண்பருடன் குளத்தூர் கிராமத்திற்கு சென்று பள்ளியை பார்த்த பிறகு அப்பகுதி மக்களிடம் இது பற்றி பேசினோம். அப்போது அவர்களிடம் நாம்,  மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் தான் பள்ளிகள் மூடப்படுகிறது. 1952 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளியை உங்கள் காலத்தில் மூடிவிட்டார்கள் என்றால் எதிர்கால சந்ததியினர் உங்களை குறை சொல்லமாட்டார்களா? இதேபோல கடந்த சில ஆண்டுகளில் அருகில் உள்ள அல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்னறிவிப்பு இல்லாமல் பூட்டப்பட்ட நிலையில் மீண்டும் மாணவர்களை சேர்த்து பள்ளி இயங்கி வருகிறது.

அதேபோல வல்லம்பக்காடு கிராமத்தில் அரசுப்பள்ளியை மூட உத்தரவிட்ட பிறகு கிராம மக்கள் இணைந்து தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புவதை நிறுத்திவிட்டனர். தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து அங்கன்வாடியை எல்.கே.ஜி. யூகே.ஜி வகுப்புகளை நடத்த சொந்த செலவில் செட் அமைத்து செயல்படுத்தி வருவதுடன் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்று அந்த கிராமத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் வருவதில்லை. அப்படி அந்த கிராமங்கள் செயல்படும் போது ஏன் உங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து தனியார் பள்ளிக்கு செய்யும் செலவுகளில் சிறிதளவு செய்து உங்கள் ஊர் பள்ளியை மீட்க கூடாது என்று நாம் பேசினோம்.

அனைத்தையும் கேட்ட கிராம பெரியவர்கள் முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் உடனடியாக கிராம கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக 10 குழந்தைகளை சேர்ப்போம். பள்ளியை மூட விட மாட்டோம் என்று சொன்னதுடன் கிராம கூட்டத்தையும் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினார்கள். கிராம மக்களின் தீர்மானத்தை கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவலாக கொடுத்தவர்கள். திங்கள் கிழமை தங்கள் குழந்தைகளுடன் பள்ளிக்கு வருவோம். எங்கள் குழந்தைகளை சேர்த்து பள்ளியை திறந்து செயல்படுத்த வேண்டும்  என்று கூறியிருந்தனர்.  

இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வம், வட்டார கல்வி அலுவலர் முத்து குமார் ஆகியோர் மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர்களிடம் விசாரணை செய்த பிறகு பள்ளி திறக்கப்பட்டு 11 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் மீண்டும் தொடங்கியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.