The villagers who attacked the Dhasildar who went to inspect!

அரியலூர் மாவட்டம், சுத்துக்குளம் என்ற கிராமத்தில் பிரபலமான முனீஸ்வரன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கோவில் திருவிழாவின் போது மாடுகளைக் கொண்டு மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நடத்துவதற்காக கிராமத்தினர் ஏற்பாடுகள் செய்து வந்தனர். அந்தத் திருவிழாவின்போது மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி தரமுடியாது என மறுத்துவிட்டதாக தெரிகிறது.

Advertisment

இந்த நிலையில், தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன், சுத்துகுளம் கிராமத்தில் திருவிழாவைக் கண்காணிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு போலீஸ் பாதுகாப்புடன் சென்றுள்ளார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான தடுப்பு வேலிகளை கண்ட வட்டாட்சியர், அதிகாரிகளின் உத்தரவுக்கு எதிராக மஞ்சுவிரட்டு நடத்தக்கூடாது என்று கூறி அதற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றுமாறு விழா பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அகற்ற முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து வட்டாட்சியர் உத்தரவின் பேரில் பொக்லைன் எந்திரம் வரவழைத்து அந்தத்தடுப்புகளை அரசு ஊழியர்கள் அகற்றியுள்ளனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் சிலர், தாசில்தார் ஆனந்தன் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவரது வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கதிரவன், கூடுதல் போலீஸ் படையுடன் அந்தக் கிராமத்திற்கு விரைந்து சென்று வட்டாட்சியர் ஆனந்தனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் விழாக்குழுவினர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக அந்தக் கிராமத்தில் அதிக அளவிலானபோலீசாரை பாதுகாப்புக்கு குவித்துள்ளனர்.