
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகாவுக்குட்பட்ட கடலி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இச்சமுதாய மக்களுக்காக வராகநதி கரையோரம் அரை ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு அமைந்துள்ளது. தற்போது அப்பகுதி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளதால் சிறிதளவு பகுதியே மயான பகுதியாக உள்ளது.
வராக நதியில் மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்பட்டால் சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் உள்ளது. கிராமப்பகுதி வழியாக சடலத்தை எடுத்து செல்வதற்கும் எதிர்ப்புகள் அதிகம் உள்ளதால், சடலத்தைக் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது.
மேலும் அப்பகுதியில் உயிரிழப்பவர்களின் சடலங்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு பாதை இல்லாததால், நெல் போன்றவைகளை பயிரிடப்பட்ட விளைநிலங்கள் வழியாக சடலங்களை சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலநிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
விவசாய நிலத்தின் வழியாகவே சடலத்தை சுமந்து செல்வதால் விவசாய பயிர்கள் சேதம் ஆவதும், அவ்வழியாக சடலத்தை கொண்டு செல்லும்போது விவசாயிகளிடம் வாக்குவாதம் ஏற்படும் நிலையும் தொடர்கதையாகி உள்ளது.
இதனால் கிராம மக்களுக்கு சுடுகாட்டு பாதை அமைத்து தரக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடலி கிராம மக்களுக்கு நிரந்தர சுடுகாட்டுப் பாதையை அமைத்துத் தருமாறும் அல்லது குடியிருப்பு அருகாமையிலேயே மயானத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
தற்போது பல முன்னேற்றங்களை சமுதாயம் பெற்றுள்ள நிலையில் கடலி கிராம தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் மயானப்பாதை இல்லாமல் வயல் வெளியில் சடலத்தை சுமந்து செல்வது பெருத்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்டு சுடுகாட்டு பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.