
ஜெயங்கொண்டம் அருகே பெரிய வளையம் கிராமத்தில் தேசிய புறவழிச் சாலையில் பணி நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், பெரியவளையம் கிராம மக்கள் பாதுகாப்பான முறையில் செல்லவும், விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கவும் சாலையின் நடுவே பாலம் அமைத்து தர வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், பெரியவளையம் கிராமத்தில் சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் நிலத்தின் உரிமையாளர்கள் தங்களுக்குரிய இழப்பீடு தொகை விரைவில் வழங்கக் கோரியும் சாலையின் நடுவே பாலம் அமைத்துத் தர வேண்டுமெனவும் கிராம மக்கள் புறவழிச்சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தியும் இயந்திரங்களை முற்றுகையிட்டும் நேற்று முன்தினம் (7-8-2021) காலை எட்டு மணி அளவில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடத்தினார்கள்.
அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இதற்கான ஏற்பாடுகள் செய்வதாக வாக்குறுதி கொடுத்ததை அடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றார்கள். திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கொடுக்காமல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் உள்ளது. அதனை விரைந்து முடிக்கவும் அதுவரை பணியைத் துவங்கக் கூடாது என்றும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இழப்பீட்டு தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால், சாலை பணியைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். பாலம் அமைப்பது குறித்து மக்கள் கூறுவது, சுமார் ஐந்து கிராமங்கள் இந்த சாலையின் வழியாக சென்று பயனடைகிறார்கள். அதுமட்டுமின்றி மருத்துவமனைக்குச் செல்வதற்கு இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.