



நேர்மையான அதிகாரிகளைப் பாராட்டுவதிலும் அவர்களுக்கு விழா எடுப்பதிலும் தமிழ்நாட்டு மக்கள் ஒதுபோதும் குறைவைப்பதில்லை.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக அருள்வேந்தன் கடந்த ஓராண்டுக்கு முன்பு பணியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு கிராம மக்கள் சான்றிதழ்கள் பெற எளிமையாக அணுக முடிந்தது. இணைய வழியில் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தாலும் உடனுக்குடன் சான்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுத்துவந்தார். மேலும், எந்த ஒரு சான்றிதழுக்கும் யாரிடமும் லஞ்சம் பெறாமல் அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்ததால் கிராம மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்தநிலையில்தான் இன்று (29.07.2021) அவரது பிறந்தநாளை செரியலூர் ஜெமின் ஊராட்சிமன்றத் தலைவர் அலமுகார்த்திகா நிவாஷ், செரியலூர் இனாம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் குமாரவேல் மற்றும் கிராம இளைஞர்கள் இணைந்து கிராம நிர்வாக அலுவலகத்தில் வண்ண காகிதங்களால் அலங்கரித்து, பிறந்தநாள் கேக் மற்றும் மரக்கன்றுகளுடன் ஊர்வலமாகச் சென்று, அலுவலக வளாகத்தில் வைத்து கிராம நிர்வாக அலுவலரை கேக் வெட்ட வைத்துக் கொண்டாடினார்கள். கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு கேக் ஊட்டியதோடு பொன்னாடைகள் அணிவித்தனர். மேலும், அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
இதுபோல ஒவ்வொரு கிராமத்திற்கும் நேர்மையான கிராம நிர்வாக அலுவலர் கிடைத்தால் லஞ்சமின்றி மக்கள் தங்கள் வேலைகளை செய்துகொள்ளலாம்.