ADVERTISEMENT

'பூஜை சோறு' வாட்ஸப் குரூப்! - புதுகை இளசுகளின் புது 'ஐடியா'!

11:54 AM Aug 16, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு நீண்ட நெடிய வரலாறு கொண்டது. தமிழர்களின் விழாக்கள் எல்லாமே ஏதாவது காரணங்களோடு தான் கொண்டாடப்படுகிறது. அதே போல தான் ஆடி மாதத்தில் விவசாயம் தொடங்கும் காலம் என்றாலும் கிராம காவல் தெய்வங்களுக்கு குதிரை எடுப்பு, மது எடுப்பு, முளைப்பாரித் திருவிழா என்று இந்த மாதத்தில் கிராமங்கள் எப்போதும் களைகட்டி இருக்கும். மற்றொரு பக்கம் குலதெய்வ வழிபாடுகள், சில இடங்களில் பச்சை பரப்புதல் என்று பொங்கல் படையல்கள் இருந்தாலும் பல இடங்களில், ஆடு, கோழிகளைப் பலியிட்டு உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கெல்லாம் சொல்லி விருந்து படைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆடி மாதம் முழுவதும் பூஜை சோறுகளுக்கு பஞ்சமில்லை. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு வாட்ஸ்அப் குழு "பூஜை சோறு தகவல் மையம்". இந்த குழுவில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள ஏராளமானவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு தினசரி எங்கெல்லாம் பூஜை சோறு போடப்படுமோ, அந்த தகவல் பகிரப்படுகிறது. இந்த குழு உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களோடு பூஜைக்கு போய் விடுகிறார்கள். ஆடி மாதம் மட்டுமின்றி அனைத்து மாதங்களும் நடக்கும் பூஜை தகவல்களும் பகிரப்படுகிறது. அதே போல, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை கிராமத்தில் உள்ள சங்ககால கோட்டையின் நான்கு வாசல் காவல் தெய்வங்களாக உள்ள முனீஸ்வரன், காளி, கருப்பர், வீரப்பன் கோயில்களில் ஒவ்வொரு நாளும் நேர்த்திக்கடன் செய்துள்ளவர்கள் ஆடு, கோழிகள் பலியிடுகிறார்கள்.

இங்கு நேர்த்திக்கடனாகக் கொடுக்கப்படும் ஆடு, கோழிகளை கிராமத்தினரே சமைத்து வருவோருக்கெல்லாம் உணவாகக் கொடுக்கிறார்கள். ஆட்டுக்கறி மட்டும் தனியாகக் குழம்பாக இல்லாமல் தண்ணீர் இன்றி சமைக்கப்பட்டு தனியாக ரசம் வைத்து பரிமாறப்படுகிறது. இதற்காக மண் தரையில் சாப்பிட அமர்ந்தவர்கள், ரசம் நிறைய வேண்டும் என்பதற்காக, மண்ணில் குழி தோண்டி அதற்குள் இலை வைத்து சாப்பாடு வாங்குவதும் வியப்பு தான். ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு மேல் பூஜை சோறு சாப்பிடுகிறார்கள்.

இது குறித்து சமையல் ஏற்பாடுகளில் இருந்த பாஸ்கர் கூறியதாவது, “இங்குள்ள சாமிகள் கோட்டைக் காவல் தெய்வங்கள் மட்டுமின்றி பல மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக உள்ளதால் ஒவ்வொரு நாளும் வெளியூர் பக்தர்கள் நிறைய வருவார்கள். இங்கு நேர்த்திக்கடன் செய்துள்ள ஆடு, கோழிகளை இங்கேயே சமைத்துச் சாப்பிட வேண்டும். அதனால் எங்களிடம் கொடுப்பார்கள். நாங்களே சமைத்துப் பரிமாறுகிறோம். இரவு பூஜைகளும் உண்டு. சில நேரங்களில் பெண்கள் சாப்பிடக்கூடாது. இதை ஒரு கிராமத்து வாழ்வியலாகத் தான் பார்க்கிறோம்" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT