Skip to main content

'பூஜை சோறு' வாட்ஸப் குரூப்! - புதுகை இளசுகளின் புது 'ஐடியா'!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

Villagers celebrate temple festivals using the Whats app

 

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு நீண்ட நெடிய வரலாறு கொண்டது. தமிழர்களின் விழாக்கள் எல்லாமே ஏதாவது காரணங்களோடு தான் கொண்டாடப்படுகிறது.  அதே போல தான் ஆடி மாதத்தில் விவசாயம் தொடங்கும் காலம் என்றாலும் கிராம காவல் தெய்வங்களுக்கு குதிரை எடுப்பு, மது எடுப்பு, முளைப்பாரித் திருவிழா என்று இந்த மாதத்தில் கிராமங்கள் எப்போதும் களைகட்டி இருக்கும். மற்றொரு பக்கம் குலதெய்வ வழிபாடுகள், சில இடங்களில் பச்சை பரப்புதல் என்று பொங்கல் படையல்கள் இருந்தாலும் பல இடங்களில், ஆடு, கோழிகளைப் பலியிட்டு உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கெல்லாம் சொல்லி விருந்து படைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த ஆடி மாதம் முழுவதும் பூஜை சோறுகளுக்கு பஞ்சமில்லை. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு வாட்ஸ்அப் குழு "பூஜை சோறு தகவல் மையம்". இந்த குழுவில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள ஏராளமானவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு தினசரி எங்கெல்லாம் பூஜை சோறு போடப்படுமோ, அந்த தகவல் பகிரப்படுகிறது. இந்த குழு உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களோடு பூஜைக்கு போய் விடுகிறார்கள். ஆடி மாதம் மட்டுமின்றி அனைத்து மாதங்களும் நடக்கும் பூஜை தகவல்களும் பகிரப்படுகிறது. அதே போல, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை கிராமத்தில் உள்ள சங்ககால கோட்டையின் நான்கு வாசல் காவல் தெய்வங்களாக உள்ள முனீஸ்வரன், காளி, கருப்பர், வீரப்பன் கோயில்களில் ஒவ்வொரு நாளும் நேர்த்திக்கடன் செய்துள்ளவர்கள் ஆடு, கோழிகள் பலியிடுகிறார்கள்.

 

Villagers celebrate temple festivals using the Whats app

 

இங்கு நேர்த்திக்கடனாகக் கொடுக்கப்படும் ஆடு, கோழிகளை கிராமத்தினரே சமைத்து வருவோருக்கெல்லாம் உணவாகக் கொடுக்கிறார்கள். ஆட்டுக்கறி மட்டும் தனியாகக் குழம்பாக இல்லாமல் தண்ணீர் இன்றி சமைக்கப்பட்டு தனியாக ரசம் வைத்து பரிமாறப்படுகிறது. இதற்காக மண் தரையில் சாப்பிட அமர்ந்தவர்கள், ரசம் நிறைய வேண்டும் என்பதற்காக, மண்ணில் குழி தோண்டி அதற்குள் இலை வைத்து சாப்பாடு வாங்குவதும் வியப்பு தான். ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு மேல் பூஜை சோறு சாப்பிடுகிறார்கள்.

 

இது குறித்து சமையல் ஏற்பாடுகளில் இருந்த பாஸ்கர் கூறியதாவது, “இங்குள்ள சாமிகள் கோட்டைக் காவல் தெய்வங்கள் மட்டுமின்றி பல மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக உள்ளதால் ஒவ்வொரு நாளும் வெளியூர் பக்தர்கள் நிறைய வருவார்கள். இங்கு நேர்த்திக்கடன் செய்துள்ள ஆடு, கோழிகளை இங்கேயே சமைத்துச் சாப்பிட வேண்டும். அதனால் எங்களிடம் கொடுப்பார்கள். நாங்களே சமைத்துப் பரிமாறுகிறோம். இரவு பூஜைகளும் உண்டு. சில நேரங்களில் பெண்கள் சாப்பிடக்கூடாது. இதை ஒரு கிராமத்து வாழ்வியலாகத் தான் பார்க்கிறோம்" என்றார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.