Advertisment

‘ரேஷன் பொருள் வாங்க 3 கி.மீ போகனும்..’; அதிகாரிகளின் அலட்சியம்  - கிராம மக்கள் வேதனை

Villagers are worried about having to walk 3 kilometers to buy ration items

தூத்துக்குடி மாவட்டம் அ. லட்சுமிபுரம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அனைவருமே விவசாய கூலித் தொழிலாளர்களாகவும், ஆடு மாடுகள் வளர்க்கக்கூடிய கால்நடை வளர்ப்போராகவும் உள்ளனர். இந்த கிராம மக்கள் ரேஷன் பொருள்களை வாங்கி வர 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவஞானபுரம் கிராமத்துக்கு சென்று வர வேண்டிய நிலைமை உள்ளது.

Advertisment

வயதான முதியவர்கள், பெண்கள், கைக்குழந்தை வைத்திருக்க கூடிய தாய்மார்கள் உள்ளிட்டோர் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு காட்டு வழியாக பயணம் செய்து ரேஷன் பொருள்களை வாங்கி வருவதில் பல்வேறு இடர்பாடுகளை அனுபவித்து வருகின்றனர். தங்கள் கிராமத்திலேயே ரேஷன் பொருள்களை விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை தீர்வு கிடைத்தபாடில்லை.

Advertisment

அ. லட்சுமிபுரத்தை சேர்ந்த கலைச்செல்வி நம்மிடம் கூறுகையில், “எங்க கிராமத்துக்கு ரேஷன் கடை வேணும்னு நாங்கள் தூத்துக்குடி கலெக்டர் ஆபீசுக்கு பலமுறை சென்று மனு அளித்துள்ளோம். அதிகாரிகள் வந்து வந்து பார்வையிட்டு விசாரித்து செல்கிறார்களே, தவிர எங்களுக்கு இதுவரை ரேஷன் கடை வந்தபாடில்லை. ஒவ்வொரு முறையும் மனு கொடுத்துட்டு வந்ததும் அடுத்த சில நாட்களில் புதுசு புதுசாக அதிகாரிகள் எங்க கிராமத்துக்கு வருகிறார்கள். உங்களுக்கு ரேஷன் கடை சீக்கிரம் வந்துடும்மா. இந்த ஒரு தடவை மட்டும் சிவஞானபுரத்துக்கு போய் ரேஷன் பொருள் வாங்குங்க அப்படின்னு சொல்லிட்டு போறாங்களே தவிர இதுவரைக்கும் ரேஷன் கடை வரவில்லை. ஏதாவது ஏற்பாடு செய்கிறோம்கிற கதை தான் மாச மாசம் தொடர்ந்து போய்கிட்டே இருக்குது. வயசுல மூத்த பெரியவங்க எல்லாம் கை வலி, கால் வலின்னு முடங்கி கிடக்கிறாங்க.

எல்லோரது வீட்டிலேயும் சின்ன சின்ன குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள் இருப்பதால் அவர்களையும் தூக்கிக் கொண்டு இப்போ வரைக்கும் சிவஞானபுரத்துக்கு நடந்து சென்று தான் பெண்கள் ரேஷன் பொருள்களை வாங்கி வருகிறோம். இந்த மாதம் எங்கள் ஊருக்கு வந்து ரேஷன் பொருள்களை விநியோகம் செய்தால் வாங்குவோம். இல்லையென்றால் இனிமேல் நாங்கள் யாரும் 3 கிலோ மீட்டருக்கு அலைந்து திரிந்து ரேஷன் பொருளை வாங்க தயாராக இல்லை. ஒரே நேரத்துல லட்சுமிபுரம் மக்களும், சிவஞானபுரம் மக்களும் ரேஷன் பொருள் வாங்க வருகை தருவதால் அங்கே குளறுபடியும் ஏற்படுகிறது. ரேஷன் பொருளை வாங்குற அன்னைக்கு நாங்க காலையில 7 மணிக்கு அங்க போயிருவோம். ஆனால் அவங்க 10 மணிக்கு தான் வருவாங்க. நாங்க ரேஷன் பொருள்களை வாங்கிட்டு மாலை 3 மணிக்கு தான் வீடு திரும்புறோம். இப்படி எங்களுக்கு பல கஷ்டம் இருக்கு. அதனால அ. லட்சுமிபுரம் கிராமத்தில் நூலக கட்டிடத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமா ரேஷன் கடை அமைத்து தரணும்னு நாங்க எதிர்பார்க்கிறோம். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தினால் இப்போ வரைக்கும் துயரம் தான் தொடருது சார்” என்றார்.

அரசு அலுவலகங்களை தேடித்தேடி மக்கள் அலைந்த அந்த ஒரு காலகட்டம் உருமாறி, இன்றைக்கு மக்களைத் தேடி அரசு நிர்வாகம் பயணிக்கும் சூழலில், ரேசன் பொருள்களை வாங்க 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பெண்கள் காட்டு வழியே பயணம் மேற்கொள்ளும் அவல நிலை மாற வேண்டும். லட்சுமிபுரம் கிராமத்திலேயே ரேசன் பொருட்களை விநியோகம் செய்ய அதிகாரிகள் விரைந்து உரியத் தீர்வு காண வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

govt officers Ration card Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe