கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்ய மக்கள் நீதி மையத்திற்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

VILLAGE MEETING... HIGHCOURT

தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக பொது நல மனு தாக்கல் செய்ய, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பஞ்சாயத்து சட்டப்படியும், கிராமசபை கூட்ட விதிகளின்படியும் ஆண்டுக்கு இரு முறை, கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அக்டோபர் 2-ம் தேதி, காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், செப்டம்பர் 26-ம் தேதி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், கரோனா தொற்றை காரணம் காட்டி, அக்டோபர் 2-ம் தேதி நடக்கவிருந்த கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர். இதை எதிர்த்து, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கிராமங்களின் நிர்வாகம், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்படும் கிராமசபைக் கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எந்த முக்கிய காரணமும் இல்லாமல், கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதமானது. ரத்து செய்யப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை, அக்டோபர் 7-ம் தேதி நடத்தக் கோரி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனருக்கு அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது பொது நலம் சார்ந்த விவகாரம் என்பதால், பொது நல மனுவாக தாக்கல் செய்ய மக்கள் நீதி மையத்திற்கு அறிவுறுத்தினார். இந்த ரிட் மனுவை திரும்பப் பெறவும் மக்கள் நீதி மையத்துக்கு நீதிபதி அனுமதியளித்தார்.

Chennai highcourt
இதையும் படியுங்கள்
Subscribe