Skip to main content

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கிராம சபை தீர்மானம்!!

Published on 26/01/2020 | Edited on 26/01/2020

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அமைச்சரின் அவசர சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

Village Council resolution against hydrocarbon in Pudukkottai, Thanjavur and Thiruvarur Districts


காவிரி டெல்டா பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி பாயும் நெடுவாசல் கிராமத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த 2017 ம் ஆண்டு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது. அதன் பிறகு போராட்டங்கள் வெடித்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். ஆனால் தற்போது மீண்டும் அந்த திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்ட நிலையில் மக்கள் கருத்து கேட்கப்படாமலும், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமலும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரும் இதே கருத்துகளை கூறியுள்ளார். அதனால் மீண்டும் தமிழக விவசாயிகள் வெகுண்டெழுந்துள்ளனர்.

 

Village Council resolution against hydrocarbon in Pudukkottai, Thanjavur and Thiruvarur Districts

 

இந்தநிலையில்தான் அதிகாரம் படைத்த கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு கைஃபா இளைஞர் அமைப்பினரும், பி.ஆர். பாண்டியனும் வலியுறுத்தி இருந்தனர்.

அதன் படி இன்று நடந்த கிராம சபைக் கூட்டங்களில் நெடுவாசல், கொத்தமங்கலம், செரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், தஞ்சை மாவட்டத்தில் கரம்பக்காடு, செருவாவிடுதி உள்ளிட்ட பல கிராமங்களிலும் அதே போல திருவாரூர் மாவட்ட கிராமங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்கள் அனைத்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்க கைஃபா இளைஞர் அமைப்பினர் அடுத்தகட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையும் மீறி திட்டத்தை செயல்படுத்த நினைத்தால் மிகப் பெரிய போராட்டங்களில் இறங்குவோம் என்கிறார்கள் விவசாயிகளும், இளைஞர்களும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

முதல்வர் காட்டிய கறார்; ஓரங்கட்டப்பட்ட சீனியர் - யார் இந்த முரசொலி?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Thanjavur Parliamentary Constituency Candidate murasoli Details

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 20 ஆம் தேதி வெளியிட்டார். அந்த வேட்பாளர் பட்டியலில் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், டி.ஆர். பாலு போன்ற திமுகவின் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுமுக வேட்பாளர்கள் 11 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை மேடையில் வெளியிட்ட மு.க. ஸ்டாலின், தஞ்சையில் முரசொலி என்ற வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு, 'முரசொலியே அங்கே நிற்கிறது' என அழுத்தமாக கூறினார். அப்போதே அனைவரது கவனத்தையும் புதுமுக வேட்பாளர் முரசொலி பெற்றார். இந்த நிலையில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிமுகமான முரசொலி, 9 முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு அதில் 6 முறை எம்.பியாக தஞ்சையில் வெற்றிபெற்ற சீனியரான பழநிமாணிக்கத்தை ரேஸில் வீழ்த்தி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியிடும் தொகுதி மக்களுக்கே ஆச்சரியம் கொடுத்துள்ளார் புதுமுக வேட்பாளர் முரசொலி. தலைமை எப்படி அவரை தேர்ந்தெடுத்தது என்பது குறித்து தஞ்சை திமுகவினர் வட்டாரத்தில் பேசுகையில், பல தகவல்கள் கிடைத்தது. முன்னதாக தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு பழநிமாணிக்கம், முரசொலி, ராதிகா மணிமாறன், அஞ்சுகம் பூபதி, கலைவாணி மோகன் உள்ளிட்ட 24 பேர் விருப்ப மனுவை திமுக தலைமையிடம் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், நேர்காணலில் திமுக தலைமை முரசொலி மற்றும் ராதிகா மணிமாறனிடம்  மட்டும் எவ்வளவு பணம் தேர்தலுக்கு செலவு செய்வீர்கள் எனக் கேட்டு விவரம் பெற்றுள்ளனர். ஆனால், சீனியர் சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கத்திடம் எதுவும் கேட்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதுவே, சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கத்திற்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது எனப் பேசுபொருளை உண்டாக்கியுள்ளது.

இப்படியிருக்கையில், முரசொலியோ தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னே தொகுதிக்கு உட்பட்ட சில எம்.எல்.ஏக்களை சந்தித்து சீட் கிடைத்தால் ஆதரவு வேண்டும் என ஆசி பெற்றுள்ளார். இதனால், முரசொலி தான் தஞ்சை வேட்பாளர் என திமுகவினர் பரவலாகப் பேசியுள்ளனர். இந்த செய்தி அறிந்த சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் முகாமிட்டு மீண்டும் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளார். ஆனால், அவரை அழைத்துப் பேசிய திமுக தலைமை, இந்த முறை உங்களுக்கு சீட் இல்லை. கட்சி அறிவிக்கும் நபரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று வெளிப்படையாக சொல்லியுள்ளது. அப்போது, இந்த ஒரு முறை மட்டும் என தஞ்சை சிட்டிங் எம்.பி. பேச்சை ஆரம்பிக்க, கட்சியின் தலைமையோ ஸ்ட்ரிக்டாக புதுமுகம் தான் இந்த முறை என சொல்லியதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில், திமுக தலைமை புதுமுகமான முரசொலியை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளதாக தஞ்சாவூர் திமுகவைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

தஞ்சை தொகுதிக்குள் பெரிதாக அறிமுகம் இல்லாத முரசொலி, வேட்பாளராக இடம் பிடிப்பதற்கு அவருடைய அமைதியான சுபாவம் தான் முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது. மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரனின் நெருங்கிய ஆதரவாளர் முரசொலி. திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடையது பாரம்பரியமான தி.மு.க குடும்பம். முன்பே வடக்கு ஒன்றியச் செயலாளருக்கான உள்கட்சித் தேர்தலில் பழநிமாணிக்கம் தரப்பை எதிர்த்து முரசொலியை ஒன்றியச் செயலாளர் ஆக்கினார் சந்திரசேகரன். அதன் பிறகு கட்சிப்பணிகளை செய்து வந்த முரசொலி, ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இரண்டு இடங்களில் 50 அடி உயர கொடிக் கம்பத்தில் தி.மு.க கொடி ஏற்றும் நிகழ்வை விமரிசையாக நடத்தினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் முரசொலியை வெகுவாகப் பாராட்டினார். அமைச்சர் அன்பில் மகேஸ், மேயர் சண். ராமநாதன் ஆகியோரின் சிபாரிசும் அவருக்கு கிடைக்க வேட்பாளர் ரேஸில் வெற்றி பெற முக்கிய காரணமாக திமுகவினர் கூறுகின்றனர். அதிலும் மேயர் ராமநாதன், முரசொலிக்காக தனிப்பட்ட முறையில் உதயநிதியிடம் பேசியதாகச் சொல்லப்படுகிறது. டி.ஆர். பாலு ஆதரவும் இருந்தது இவருக்கான ப்ளஸ் பாயிண்ட். தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த முரசொலி எளிமையாவர், அமைதியான சுபாவம் கொண்டவர் எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர் என்கின்றனர் திமுகவைச் சேர்ந்தவர்கள். அந்த பண்பே முரசொலி சத்தமில்லாமல் சாத்தித்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். துரை. சந்திரசேகரன் ஆதரவாளரான முரசொலிக்கு சீட் கிடைத்திருப்பதன் மூலம் சந்திரசேகரனின் கை தஞ்சையில் ஓங்கியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

புதுமுகமாக இருந்தாலும் தஞ்சை தொகுதியில் தி.மு.க-விற்கு பெரும்பான்மையான ஆதரவு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை நிரூபிக்கும் விதமாக புதியவரான முரசொலிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை பழநிமாணிக்கத்திற்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்றும், 6 முறை ஒரே தொகுதியில் எம்.பியாக வென்ற ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கினால், அந்த மாவட்டத்தில் பணியாற்றும் புதியவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள் என்பதும் தான் அக்கட்சியினர் கூறும் காரணமாக இருக்கிறது. ஆனால், சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் உள்ளடி வேலை செய்யக்கூடும், தொகுதிக்கு புதிய முகம் உள்ளிட்டவை முரசொலிக்கு சவாலாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே, முரசொலியின் ஆதரவாளர்கள் தஞ்சையில் தடபுடலாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர்.