
தமிழகத்தில் கடந்த காலங்களில் மண், மணல் திருட்டை தடுக்கச் சென்ற அதிகாரிகளை ஈவு இறக்கமின்றி படுகொலை செய்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நடந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அறந்தாங்கி தாலுகா, கம்மங்காடு சரக கிராம உதவியாளராக உள்ளவர் செந்தில். புதன்கிழமை ஆளப்பிறந்தான் குடிக்காடு கண்மாயில் மண் அதிகமாக எடுக்கப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் வர, உடனடியாக கிராம உதவியாளர் செந்திலை சம்பந்தப்பட்ட கண்மாய்க்கு அனுப்பி ஆய்வு செய்யக் கூறியுள்ளார்.
ஆய்வுக்குச் சென்ற கிராம உதவியாளர் செந்தில் கண்மாயை பார்த்த பிறகு ஆளப்பிறந்தான் கடைவீதியில் சாலை ஓரம் நின்று அதிகாரிகளுக்கு செல்போனில் தகவல் கொடுத்துக் கொண்டிருந்தபோது, புதுப்பட்டி பக்கத்திலிருந்து அறந்தாங்கி நோக்கி வேகமாக வந்த கார் ஒன்றுசாலை ஓரமாக நின்ற கிராம உதவியாளர் செந்தில் மீது மோத தூக்கி வீசப்பட்ட செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட, கார் புதுப்பட்டி அருகே உள்ள போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவருடையது என்பது தெரிய வந்துள்ளது. மண் திருட்டை அதிகாரிகளுக்கு தகவல் சொன்னதால் கிராம உதவியாளர் திட்டமிட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறி அவரது உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைவில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சரியான விசாரணை செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மண் திருட்டை தடுக்கச் சென்றதால்தான் விபத்து ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. விபத்தில் பலியான செந்திலுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)