Vikravandi by election Nomination completed

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Advertisment

அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தேமுதிகவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது.

Advertisment

அதே போல், த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்கரவாண்டி சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (21.06.2024) மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. அதன்படி விக்கரவாண்டி இடைத் தேர்தலில் மொத்தம் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 64 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.