Advertisment

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Vikravandi by-election District Collector action order

Advertisment

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில்தான் இடைத்தேர்தல் முன்னிட்டு, விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சி. பழனி இன்று (04.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக 4 நாட்கள் விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வரும் 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் 8 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை என 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட உள்ளன என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

TASMAC Vikravandi villupuram
இதையும் படியுங்கள்
Subscribe