
நடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி, நடிகர் விஜய் தரப்புக்கு கண்டனம் தெரிவித்து, ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது.
இதில் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சொகுசு கார் நுழைவு வரி வழக்கில் எங்கள் மீதான விமர்சனத்தை நீக்குங்கள். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை, மதிக்கிறோம்" என்று வாதிட்டார். இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி விதித்த ஒரு லட்சம் அபராதத்திற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தனி நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்களை நீக்குவது பற்றி 4 வாரங்களுக்குப் பிறகு விசாரணை நடத்துவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.