
சென்னை வியாசர்பாடி முல்லை நகர்ப் பகுதியில் நேற்று (26-05-25) இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்றனர். அப்போது த.வெ.க பெண் நிர்வாகிகளை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன. தீவிபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள், தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து பெற்றுக்கொண்டனர்.
இதனைப் பார்த்த காவல்துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். காவல் துறையினர் வரம்பு மீறிப் பேசி, அத்துமீறிச் செயல்படுவதைப் பார்த்த கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதி(45), மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது ஏன் என்று காவல் துறையினரை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது காவல்துறையினர் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி, கழக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து, கீழே தள்ளியுள்ளனர். மேலும், இதைத் தடுக்கச் சென்ற கழக மகளிரணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியின் ஆடையைக் காவல் துறையினர் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டுள்ளனர். காயமடைந்த கழக உறுப்பினர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையினரைப் பார்த்து நியாயமான முறையில் கேள்வி கேட்ட த.வெ.க. பெண் நிர்வாகிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடையைப் பிடித்து அந்த ஆடை கிழியும் அளவிற்கு அவர்களை இழுத்துத் தள்ளி விடும் காவல்துறையின் செயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பெண்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், அவர்களின் ஆடையைக் கிழித்தும் அராஜகமாக இழிவாகத்தான் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாரா? தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா என்ன?' என குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் 'வியாசர்பாடி தீ விபத்து சம்பவத்தில் போலீசாரால் யாரும் தாக்கப்படவில்லை. கட்சியில் அங்கீகாரம் பெறுவதற்காக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றனர். வியாசர்பாடி சம்பவத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள துணை ஆணையரை நியமித்திருக்கிறோம்' என பெருநகர காவல் ஆணையர் அருண்குமார் உத்தரவிட்டு விளக்கம் கொடுத்திருக்கிறார்.