ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் கொடுத்த விஜயநல்லதம்பி கைது! 

Vijayanallathambi arrested for filing fraud complaint against Rajendra Balaji

ஆவினில் மேலாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் 30 இலட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக சாத்தூரைச் சேர்ந்த ரவிந்தரன் என்பவர் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜி, விஜயநல்லதம்பி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தராமலும், கட்சிப் பணிகளுக்காகச் செலவழித்த பணத்தைத் திருப்பித் தராமலும் ரூ.3 கோடி வரை மோசடி செய்தார் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது அதிமுக முன்னாள் ஒ.செ.விஜயநல்லதம்பி அளித்த புகார் வழக்காகப் பதிவானது. இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தமிழ்நாடு காவல்துறை தனிப்படைகளை அமைத்து தேடிவந்தது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு அவர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீடு, கடந்த 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக 5-ஆம் தேதி கர்நாடகா-ஹாசனில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அதேசமயம் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து, அவருக்கு நான்கு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. அதோடு பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க நீதிபதிகள் நிபந்தனை விதித்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அவர் ஜாமீனின் வெளியேவந்துள்ளார்.

இந்நிலையில், ரவிந்தரனிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரும், ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் கொடுத்தவருமானமுன்னாள் ஒ.செ. விஜயநல்லதம்பி கோவில்பட்டி பகுதியில் வைத்து தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாதம் காலமாக தலைமறைவாக இருந்த விஜயநல்லதம்பி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவல்துறையினர் விருதுநகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

admk
இதையும் படியுங்கள்
Subscribe