Skip to main content

எனக்கு திமிரு ஜாஸ்தி...: விஜயகாந்த் மகனின் முதல் அரசியல் மேடை பேச்சு...

Published on 07/10/2018 | Edited on 07/10/2018

 

Vijay Prabhakaran



காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூர் அம்மன் கோயில் திடலில் தே.மு.தி.க.வின் 14-வது ஆண்டு விழா மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை மாலை நடைப்பெற்றது. 
 

மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் ஏற்பாடு செய்த இந்த விழாவில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டார். அவருக்கு இது முதல் அரசியல் மேடை என்பதால் எப்படி பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. 
 

விஜயகாந்த் போலவே விஜய பிரபாகரனின் இயல்பான பேச்சு அனைவரையும் கவர்ந்ததோடு, பலத்த விசில் மற்றும் கைத்தட்டலும் வாங்கினார். 
 

விழாவில் விஜய பிரபாகரன்,
 

"காஞ்சிபுரம் மாவட்டம் எனக்கு பிடித்த மாவட்டம். கட்சி ஆரம்பித்தது முதல் அப்பாவுடன் கூட்டத்திற்கு வருவேன். நான் பின்னாடி அமர்ந்திருப்பேன். காஞ்சிபுரம் மாவட்ட கூட்டம் மட்டும் ஷங்கர் படம் பார்ப்பது போன்று எப்போதுமே மிக பிரம்மாண்டமாக இருக்கும்.
 

காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் முருகேசன் அங்கிள் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் இந்தக் கூட்டத்திற்கு வந்தேன். முருகேசன் அங்கிளை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும். அங்கிள், உங்களுக்காக நான் ஒரு சத்தியம் செய்கிறேன். நீங்க விரைவில் செருப்பு போடுவீங்க. அதைவிட விரைவில் தாடியை எடுப்பீர்கள். 
 

சமீபத்தில் நான் பெங்களூரு, ஹைதராபாத் போயிருந்தேன். அங்கேயும் நம்மைப்போன்ற மனுஷங்கதான் இருக்கிறார்கள். ஏன் அங்க மட்டும் சிட்டி டெவலப் ஆகியிருக்கிறது. இங்க அந்த மாதிரி ஆகல.
 

இங்க இருக்கக்கூடிய மாணவர்களை கேட்டால் 3 விஷயங்களைத்தான் சொல்கிறார்கள். லாயர் ஆகணும், இன்ஜீனியர் ஆகணும், டாக்டரா ஆகணுமுன்னு சொல்றாங்க. இதைவிட மற்ற துறைகள் எவ்வளவோ இருக்கிறது. அந்த துறைகளிலும் போய் நாம் முன்னேறலாம். இதனை பள்ளியில் இருக்கும் ஆசியர்கள்தான் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

நாங்க படிக்கும்போது இந்த அளவுக்கு இன்டெர்நெட், செல்போன்கள் கிடையாது. இன்று உள்ள மாணவர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக படிக்க வாய்ப்பு உள்ளது. 
 

முன்பெல்லாம் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பார்கள். இப்ப எல்லா கோட்டுக்கும் கீழே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 
 

நான் ஆர்கிடெக் படிச்சேன். படித்து முடிந்த பின்னர் அப்பா என்னிடம், எதுவாக இருந்தாலும் அடிப்படையில் இருந்து வரணும். ஒரு கோடு முதல் எல்லாமே தெரிந்து கொள்ள வேண்டும் என சொல்லுவார். எங்கேயாவது வேலைக்கு சேர்த்துவிடட்டுமா என்று கேட்டார். வேணாம், கேப்டன் பையனா போறதவிட, விஜய பிரபாகரனா போறேன். எங்க கிடைக்கிறது என்று பார்ப்போம் என்று சொல்லிவிட்டு, என் பைலை தூக்கிக்கொண்டு பல ஆபிஸ்ல ஏறி இறங்கினேன். 
 

ஒன்னு, நீங்க வேலை கேட்கிறீங்களான்னு சொல்லி அனுப்பிடுவாங்க. இல்லன்னா, அய்யய்யோ பொலிட்டீசியன் ஏதாவது பிரச்சனை ஆயிடும் என்று சொல்லி அனுப்பிடுவாங்க. நான் சொன்னேன், எனக்கு பின்னாடி ஒரு நிழல் இருக்கிறது. அது யாருக்கும் கிடைக்காத நிழல். அந்த நிழல் கேப்டன் விஜயகாந்த். அந்த நிழலை பார்க்காதீங்க. என்னை பாருங்கள் என்றேன். என்னைப் பார்த்து, என் பைலை பாருங்க. வேண்டுமென்றால் வேலை கொடுங்கள் என்றேன். ஒரு வருடம் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்தேன். 
 

எல்லாத்துறையிலும் கஷ்டப்பட்டால் முன்னேறலாம். சைக்கிளில் போறவங்களுக்கு பைக்கில் போகணுமுன்னு ஆசை, பைக்கில போறவங்களுக்கு காரில் போகணுமுன்னு ஆசை. காரில் போறவங்களுக்கு விமானத்தில் போகணுமுன்னு ஆசை. 
 

எல்லா துறையிலும் பிரச்சனை இருக்கு. இந்த பிரச்சனையை சரிகட்டுவதற்கு ஒரு நல்ல தலைவன் வரணும். அது யாருன்னு உங்களுக்கே தெரியும். 
 

நான் காலேஜ் படிக்கும்போது என் மனதுக்கு பிடித்த இரண்டு விஷயங்களை பண்ணினேன். உங்களுக்கு எல்லோருக்மே தெரியும் எனக்கு நாய் என்றால் பிடிக்கும். நாய் கண்காட்சி எல்லா இடத்திலேயும் பண்ணிருக்கேன். 

 

Vijay Prabhakaran


 

முதல்ல நான் ஆரம்பிக்கும்போது யாருமே இல்ல. எதைக்கேட்டாலும் வடநாட்டுக்காரங்க என்று சொன்னார்கள். அப்புறம் விஜயபிரபாகரன்னு ஒருத்தன் இங்க இருக்காண்டான்னு சொல்ல வச்சேன். அப்புறம் எல்லோரும் அங்கிருந்து விஜய் பாய் என்று கூப்பிட ஆரம்பிச்சாங்க. அப்புறம் இந்தியா முழுக்க தெரிந்தது. அப்புறம் வெளிநாட்டுக்கு போனேன். இந்த துறையைப் பொறுத்தவரை வெளிநாட்டில் யாரைக் கேட்டாலும் இந்தியாவில் யாரு என்று கேட்டால் விஜயபிரபாகரன் என்று என் பெயரை சொல்லுவார்கள். 
 

இந்தியாவே கிரிக்கெட் பின்னால் போய்க்கொண்டிருக்கிறது என்பதால் வேற மாதிரி யோசித்தேன். பேட்மிட்டனை தேர்வு செய்து, பி.வி.சிந்துவை தேர்ந்தெடுத்தேன். அவர்கள் எவ்வளவு சாதித்தார்கள் என்று உங்களுக்கே தெரியும். 
 

அதனால்தான் மாணவர்களிடம் அடிக்கடி சொல்கிறேன். ஒரே மாதிரி சிந்திக்க வேண்டாம். மாறி மாறி சிந்தித்து பாருங்கள். கண்டிப்பாக வெற்றி மிக பக்கத்தில் இருக்கிறது. 
 

நான் பண்றதை எப்போதுமே விருப்பப்பட்டுத்தான் செய்வேன். நான் ஆர்கிடெக் பைனல் இயரில் தீசிஸ் பண்ணும்போதுகூட விருப்பப்பட்டுத்தான் செய்தேன். இன்றைக்கும் என்னுடைய ஜூனியர்கள் எனக்கு போன்போட்டு, நீங்க பண்ணின டிசைன் ரொம்ப நல்லாயிருக்கு. யாரும் பண்ணியது இல்லை. எப்படி நீங்க உங்களுக்கு பிடிச்சதை செய்றீங்கன்னு கேட்பாங்க. 

எனக்கு பிடிச்சதையெல்லாம் செய்யறதுக்கு அனுமதி கொடுத்தது அப்பா, அம்மாதான். தெரிஞ்சோ தெரியாமலோ இப்ப எனக்கு பிடிச்ச இடத்தில்தான் வந்து நிற்கிறேன். இரண்டு தொழில் எடுத்தேன். வெற்றி பெற்றதாக நினைக்கிறேன். (வெற்றி பெறுவீர்கள் என்று சத்தம்) பார்க்கலாம்.
 

எனக்கு பிரபாகரன் என்று அப்பா பெயர் வைத்தார். எல்லோரும் சொல்லுவார்கள் இலங்கை பிரபாகரனை நினைத்துதான் அப்பா பெயர் வைத்தார் என்று. அந்த பெயரை காப்பாற்றுவேன் என்று சத்தியம் செய்கிறேன். 
 

இந்தக் கூட்டத்திற்கு புறப்படும் முன்பு அப்பாவிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்பட்டேன். அப்போது அவர், நான் சீக்கிரம் வருவேன்னு சொல்லு என்றார். என் மக்களை தங்க தட்டில் தாலாட்ட சீக்கிரம் வருவேன்னு சொல்லு என்றார். இன்னொரு விசயம் சொன்னார். பெண்கள் நிறைய பேர் வந்திருப்பார்கள். அதனால் முருகேசனை சீக்கிரம் கூட்டத்தை முடிக்க சொல்லு. மழை வந்தாலும் வரும் என்றார். நான் சொன்னேன். நம்ம கட்சி பெண்கள் மிகவும் தைரியமானவர்கள். அம்மா பிரேமலதாவை பார்த்து பார்த்து வளர்ந்தவர்கள். யாரும் எதுவும் பண்ண முடியாது என்று சொன்னேன்.
 

தொண்டர்களை பாரு உனக்கு தைரியம் தானா வரும் என்றார். எனக்கு இப்ப பயங்கர தைரியமா இருக்கு. சத்தியமா சொல்கிறேன். இன்னும் பத்தாயிரம் பேர் வரட்டும், ஒரு லட்சம் பேர் வரட்டும், தேமுதிகவில் இருந்து ஒரு செங்கலை கூட யாராலும் அசைக்க முடியாது. இதனை நான் கேப்டன் மகனாக சொல்லவில்லை. ஒரு தமிழனாக சொல்கிறேன். 
 

நான் ஒரு இளைஞனாக தனியாக என்னால் எதுவும் செய்ய முடியாது. என் கூட பல லட்சம் இளைஞர்கள் வரவேண்டும். என்னை நீங்க விஜயகாந்த் பையனா பாக்காதீங்க. உங்க ப்ரண்டா பாருங்க. ஹாய் ப்ரோ, என்ன மச்சான், என்ன மாமா என்ற அந்த லெவலில் பாருங்க. சேர்ந்து கைகொடுங்கள். கண்டிப்பாக சாதிப்போம். 
 

எனக்கு திமிரு ஜாஸ்தி. ஆணவ திமிரு இல்ல, திரும்பவும் சொல்கிறேன். தேமுதிக அடுத்த முறை ஆட்சியை அமைக்கும். ஏனென்றால் இங்கு வரவேற்பு அப்படி, கூட்டம் அப்படி, பிரபாகனாக உங்கள் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்வேன். 
 

இது என்னோட முதல் மீட்டிங். முதல் மீட்டிங்கிலேயே அவதூறு வழக்கு வேண்டாம், டைம் ஆகப்போகுது. அதனால இங்க எங்க அப்பா, அம்மா இல்ல, வீட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சொன்னதை வைத்து முடிக்கிறேன். தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்... நமது முரசு... நாளை அரசு... விடைபெறுகிறேன். வணக்கம். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Next Story

கடலூர் உழவர் சந்தை பகுதியில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் வாக்கு சேகரிப்பு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
DMDK Treasurer Sudish Vote Collection at Cuddalore Farmers Market Area

தேமுதிக பொருளாளர் சுதீஷ், கடலூர் நாடாளுமன்ற  அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு   குள்ளஞ்சாவடி பகுதியில்  வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,  இந்த தொகுதியில் போட்டியிடும் சிவக்கொழுந்து ரசிகர் மன்றத்தில் சேர்ந்து சுமார் 40 ஆண்டுகள் பயணித்து உள்ளார். 2006 ல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் அதிமுக, தேமுதிக கூட்டணி 2011 ம் ஆண்டு பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ சிறப்பாக பணியாற்றியவர்.

அவருக்கு தொகுதியில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பது நன்றாக தெரியும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவரும் எம்.பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. திமுகவில்  ரூ.500 கோடி, ஆயிரம் கோடி இருந்தா தான் எம்பி ஆக முடியும்.  இவர் வெற்றி பெற்றால் உங்கள் கோரிக்கைகள்  ஆறு மாதத்தில் தீர்த்து வைப்பார்.  கடலூர் மாவட்டம் எங்கள் சொந்த மாவட்டம்,எனது சகோதரி இந்த மாவட்டத்தில் வசிக்கிறார்.   வேட்பாளர்  சிவக்கொழுத்துக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்  பேசினார்.

அதிமுக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன்  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர். சனிக்கிழமை  காலை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடை பயிற்சி மேற்கொண்ட வாரே தேமுதிக பொருளாளர் சுதீஷ், நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து  அவர் கடலூர் உழவர் சந்தை பகுதி சென்று அங்கு உள்ள வியாபாரிகளிடம் காய்,கறி விலைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.  தொடர்ந்து அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று டீ ஆற்றியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து, முன்னாள் அதிமுக அமைச்சர் சம்பத், அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.