ADVERTISEMENT

‘வெகுஜன மக்களின் அன்பை நிரம்பப் பெற்றவர் விஜயகாந்த்’ - துரை வைகோ இரங்கல்

07:33 PM Dec 28, 2023 | prabukumar@nak…

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர் அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் உடலுக்கு மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ADVERTISEMENT

இந்நிலையில் விஜயகாந்த் மறைவு குறித்து துரை வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தென் தமிழ்நாட்டில் மாடக்கூடல் மதுரை மாநகரில் பிறந்து தனது கடின உழைப்பாலும், திறமையாலும் திரைத்துறையில் உச்சத்தை தொட்டவர்தான் தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த். தொடர் உடல்நலக் குறைவு மற்றும் நுரையீரல் அழற்சி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்.

சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையும், உச்சத்தையும் அடைந்தவர். குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரானார். நமக்கெல்லாம் ஒரே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதைப்போல, ஒரே புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மட்டும்தான். அவருடைய அடையாளமாக இருந்தது மனிதநேயம். வள்ளல் தன்மை கொண்டவராக, ஏழை மக்களின் மீது பரிவு கொண்டவராக தன் இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர்.

திரையுலகில் பலரை அடையாளப்படுத்தியவர். பலருக்கு வாழ்வு தந்தவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது காவிரி பிரச்சனைக்காக திரையுலகினரை திரட்டி உண்ணாவிரதம் இருந்தவர். தமிழ் உணர்வும், தமிழீழப் பற்றும் கொண்டவர் விஜயகாந்த். அந்த உணர்வால்தான் தன் மகனுக்கு விஜய பிரபாரகர் என்று பெயர் வைத்தார். மதிமுக தலைவர் வைகோ மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். அரசியலில் அண்ணன் வைகோவுக்கு நான் ரசிகன் என்று சொன்னவர். தேர்தல் பிரச்சாரத்தின்போது கலிங்கப்பட்டி இல்லத்திற்கு வந்தார். அனைத்து தரப்பினராலும் அரசியல் எல்லைகளை கடந்து மதிக்கப்பட்டவர். வெகுஜன மக்களின் அன்பை நிரம்ப பெற்றவர். 'நல்ல மனிதர்' என்ற யாராலும் பெற முடியாத அடையாளத்தை பெற்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தே.மு.தி.க. தொண்டர்களுக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ம.தி.மு.க சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT