Skip to main content

இரண்டு பக்கமும் துண்டு போட்ட பிரேமலதா! இரண்டு சதவீதமாக சரிந்தது வாக்கு வங்கி!

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

 

"அரசியலில் கொஞ்சம்  ‘முன்ன பின்ன’ இருக்கத்தான் செய்யும். ஆனால், பேச்சில் சுத்தம் இருக்கணும். அதெல்லாம் எங்க கேப்டனோட போச்சு. இப்ப கட்சியில அண்ணியார் எடுக்கிற முடிவால் ரொம்ப ரொம்ப  பாதிப்பு ஏற்பட்டிருக்கு.." என்று   நம்மிடம் ‘உச்’ கொட்டினார் விருதுநகரைச் சேர்ந்த ஒரு தேமுதிக நிர்வாகி. தான் சொல்வதில் நியாயம் இருப்பதாகக் கூறினார். 

அவருடைய கணக்கு பிரகாரம் பார்ப்போமே!

 

c

 

2009-நாடாளுமன்ற தேர்தலில் தனித்து  நின்று 10 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது தேமுதிக.  தற்போது அதிமுக, புதிய தமிழகம், பாமக, பிஜேபி, சமத்துவ மக்கள் கட்சி என பெரிய படை பலத்தோடு, அதிமுக வாய்ஸில் சொல்வதென்றால் மெகா கூட்டணி அமைத்து நின்றது. ஆனால்,  2.19 சதவீத வாக்குகள் மட்டுமே தேமுதிக வேட்பாளருக்கு கிடைத்திருக்கிறது.

 

தே.மு.தி.க சந்தித்த 5-வது தேர்தல் களம் இது. 2005-ல் உதயமான தேமுதிக, முதன் முறையாக 2006-ல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் சுமார் 27,64,000 வாக்குகள் கிடைத்தன. இது மொத்த வாக்கில் 8.33 சதவிகிதம். 

 

பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கூட்டணிகளையும் எதிர்த்து 39 தொகுதிகளில். தனித்து நின்றது தே.மு.தி.க.  பெரும்பாலான தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். அந்தத் தேர்தலில் 30,73,479 ஓட்டுகள் வாங்கியது. இது பதிவான மொத்த வாக்குகளில் 10.1 சதவீதமாகும். 

 

மொத்தத்தில் அந்தத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது தேமுதிக.  கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர், சேலம், திருவள்ளூர், ஆரணி, தருமபுரி, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது கேப்டனின் தேமுதிக கட்சி. 

 

தேமுதிக பிரித்த வாக்குகளால்,  அதிமுக கூட்டணி 13 இடங்களிலும், திமுக கூட்டணி 11 தொகுதிகளிலும், பா.ஜ.க. பொன்.ராதாகிருஷ்ணனும் தோல்வியைத் தழுவினர். வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், ஏ.கே.மூர்த்தி, தங்கபாலு, தா.பாண்டியன், சாருபாலா தொண்டைமான் போன்றோரை அப்போது நாடாளுமன்றத்திற்குச் செல்லவிடாமல் தடுத்ததில் தேமுதிகவின் பங்களிப்பு அதிகம். 

 

விருதுநகரில் போட்டியிட்ட வைகோ வெறும் 15 ஆயிரத்து 764 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்  மாஃபா பாண்டியராஜன் 1,25,229 வாக்குகள் பெற்றார்.  மாஃபா பாண்டியராஜன் தற்போது அதிமுகவில் இருப்பதெல்லாம் தனிக்கதை. 

 

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் 14 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. இதில் திருப்பூரில் 2-வது இடத்தையும், மற்ற தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும் பிடித்தது அந்தக் கட்சி. மொத்தம் 5.2 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது 2009-தேர்தலில் பெற்ற வாக்குகளில் பாதிதான். 

 

தற்போது,  அதிமுக-பா.ஜ.க. கூட்டணியில் 4 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக,  நான்கிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. மொத்தம் உள்ள  4 தொகுதிகளிலும் சேர்த்து 9,29,590 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறது. இது பதிவான மொத்த வாக்கு சதவிகிதத்தில் 2.19 சதவீதம் ஆகும். ஆக,  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக,  தேமுதிகவின் வீழ்ச்சியானது,  10 ஆண்டுகளில் 10 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைந்திருக்கிறது.  இதைக் கணக்கிடும்போது,  2009 தேர்தலில் 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டதையும், தற்போது 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

தேர்தலுக்கு முன்பாக,  அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவது வாடிக்கையானதுதான். ஏதாவது ஒரு அணியில் சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதும் இயல்பானதுதான். அந்த வகையில்,  தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்கு திமுக விரும்பியது. ஸ்டாலினும் விஜயகாந்த் வீட்டிற்குப் போய் நலம் விசாரிப்பது போல், சுதீஷை சந்தித்துப் பேசினார். 

 

s

 

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "விஜயகாந்த் எனது நண்பர், அவரது உடல் நலம் குறித்து மட்டுமே விசாரிக்க வந்தேன்" என்று  தெரிவித்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் சேர முயற்சி செய்த பிரேமலதா, எங்கே அதிமுக தங்களைக் கூட்டணியில் சேர்க்க விடாமல் போய்விடுமோ என்ற பயத்தில், " ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பின்போது அரசியல் பேசப்பட்டது" என்றார் பட்டவர்த்தனமாக. 

 

ப்


இதற்கிடையே, அதிமுக பிடி கொடுக்காமல் இருந்ததால், தேமுதிகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான அனகை முருகேசன் உள்ளிட்டோரை துரைமுருகன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார் சுதீஷ். ஒருபக்கம் பா.ஜ.க. கூட்டணியுடன் பேச்சு. மறுபுறம் துரைமுருகன் வீட்டிற்கு ஆள் அனுப்பியது என டபுள் கேம் ஆடிய தேமுதிகவின் வண்டவளத்தை துரைமுருகன், தமக்கே உரிய பாணியில் ஊடகங்களிடம் போட்டு உடைத்தார். இந்தக் கோபத்தை ஊடகங்களிடம் காட்டினார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. அன்றைய பேட்டியின்போது "நீ, வா, போ, உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது..." என பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியது எல்லாம் ஊடகங்களிலும் வெளியானது. 

 

பிரேமலதாவின் இந்த வரம்பு மீறிய பேச்சுக்கள்தான்,  தேமுதிகவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.  கள்ளக்குறிச்சி தேமுதிகவுக்கு செல்வாக்கான தொகுதி.  அங்கு 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுதீஷை திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி வென்றிருக்கிறார். அதேபோல், 2009-ல் விருதுநகரில் தனித்து நின்று ஒரு லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் பெற்ற தேமுதிகவால், தற்போது கூட்டணி பலத்தோடு நின்றும் வெற்றி பெறமுடியவில்லை. 

 

மொத்தத்தில்  அந்த நிர்வாகி கூறிய கணக்கு சரியாகவே இருக்கும் நிலையில், “வீழ்ச்சிக்குக் காரணம் -  தேமுதிக மீதும்,  அதன் கூட்டணி மீதும் மக்கள் வைத்திருக்கும் வெறுப்பு  அரசியலே! இதை பிரேமலதா.. ஸாரி..  அண்ணியார் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார், அவர். 

 

-அதிதேஜா
 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

Next Story

விஜயகாந்த் மறைந்து 100ஆவது நாள் - கண்ணீருடன் பிரேமலதா அஞ்சலி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024

 

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 100 நாள்கள் நிறைவைடைகிறது. இதையொட்டி பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன் உடனிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்