ADVERTISEMENT

“மனித சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” - லியோனி வருத்தம்

12:24 PM Dec 28, 2023 | tarivazhagan

திரைப்பட நடிகரும், தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான விஜயகாந்த், மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இன்று (28.12.23) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். விஜயகாந்த் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி நம்மிடம் விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது; “விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவர், திரைப்பட நடிகர் என்பதையெல்லாம் மீறி நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர். அவரின் மனிதத் தன்மையின் காரணமாகவே, இன்று அரசியல் கட்சியையெல்லாம் தாண்டி அனைவரும் அவரின் மரணத்திற்கு வேதனையுடன் இருக்கிறோம். தன் வீட்டிற்கு தேடி வருபவர்கள் தன் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதையெல்லாம் பார்க்காமல், அவர்கள் சாப்பிட்டார்களா, அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் பிரச்சனை என்ன என்பதை கவனிப்பவர். அவ்வளவு இரக்க குணம் கொண்டவர்.

ADVERTISEMENT

2011ம் ஆண்டு தேர்தலின் போது நான் கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி எனும் ஊரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்த இடத்திற்கு அருகேயே, அவரும் பிரச்சாரத்திற்கு தயாராக வந்துவிட்டார். என் பிரச்சாரத்தின் அருகே தே.மு.தி.க.வின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துவிட்டனர். அப்பொழுது விஜயகாந்த், ‘லியோனி பேசி முடிக்கும் வரை யாரும், எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. அவர் பேசி முடிக்கும் வரை நான் காத்திருக்கிறேன்’ என்று அவரின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். பிறகு நான் பேசி முடித்துவிட்டு செல்லும் வரை காத்திருந்து பிறகு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த நிகழ்வின் போது இருவரும் எங்கள் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டோம். அப்பொழுது, அவர் எனக்கு கை குலுக்கிவிட்டு, ‘வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று தெரிவித்துவிட்டு சென்றார். இப்படியான ஒரு நல்ல எண்ணம் கொண்ட மனிதர் விஜயகாந்த். எனவே, அவரின் இழப்பு என்பது அரசியலுக்கும், திரைத்துறைக்கும் மட்டுமின்றி மனித சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” என்று தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT