Advertisment

மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம்!

Vijayakanth  funeral in flood of people

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்காக பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் திரைபிரபலங்கள் பலரும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். காலை முதலே, பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தற்போது தீவுத் திடலில் இருந்து தொடங்கியுள்ளது. இறுதி ஊர்வலம் புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த்தின் உடல்நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. விஜயகாந்த்தின் இறுதி ஊர்வல வாகனத்தை சுற்றியும் மக்கள் திரண்டு பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறனர்.

விஜயகாந்த் உடல் நல்லடக்க நிகழ்வில் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி;பொதுமக்களுக்கு அனுமதியில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதிச் சடங்கில் அரசு சார்பில் மா.சுப்ரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகிய 2 அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

dmdk vijayakanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe