
இந்தியாவில் கரோனாவின் கோர தாண்டவம் உச்சம் தொட்டுவிட்டது. தமிழ்நாட்டிலும் அதே நிலைதான். கடந்த ஆண்டைவிட வேகமாகவும் ஆபத்தாகவும் உள்ளது கரோனா. தற்போதைய நிலையில் ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய அரசு முயன்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான விராலிமலை விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
தனது மாவட்டத்தில் மற்ற 5 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தோற்றாலும், விராலிமலை தொகுதியில் சுமார் 23 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் விஜயபாஸ்கர். வெற்றிபெற்ற சில நாட்களிலேயே தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று (09.05.2021) விராலிமலை தொகுதி விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஆவூர் முன்னாள் ஊ.ம. தலைவர் மூர்த்தி தலைமையில், செங்களாக்குடி, ஒரன்டக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் திரண்டு, விஜயபாஸ்கரை வெற்றிபெற வைத்தமைக்காகவும் அவர் கரோனா தொற்றில் இருந்து விரைவில் பூரண குணமடைந்து வர வேண்டும் என்பதற்காகவும் வேண்டி, மொட்டை அடித்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.