Skip to main content

விஜயபாஸ்கர் வீட்டில் “பணப் பட்டியல்” கைப்பற்றப்பட்ட விவகாரம்: முதல்வர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
eps


 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் “பணப்பட்டியல்” விவகாரம்; முறைகேடுகளுக்கு காரணமான முதலமைச்சர், துணைபோன போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், சம்பந்தமே இல்லாமல் வழக்குப் போட்டவர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் “பணப்பட்டியல்” பிரச்னையில் வருமான வரித்துறையின் அறிக்கைப்படியான புகாரின் மீது சி.பி.ஐ விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சென்னை - ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது, முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வைத்திருந்த “பணப் பட்டியலை” வருமான வரித்துறை கைப்பற்றிய வழக்கு விசாரணையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தையும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் திசைதிருப்பி பெரிதும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டிருப்பதற்குக்  கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 

அரசியலமைப்புச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எவ்வளவு கீழ்த்தரமாக ஒரு முதலமைச்சராக இருப்பவர் கேவலப்படுத்தி இருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது பேரதிர்ச்சியாக இருக்கிறது. 
 

7.4.2017 அன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து “பணப் பட்டியல்” கைப்பற்றப்பட்டு, அந்த விவரங்கள் வருமான வரித்துறையால் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டது. அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முதலமைச்சர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மாநகர போலீஸ் கமிஷனருக்குக்  கடிதம் எழுதியது. 
 

இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அதிமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாண்புமிகு சத்யநாராயணா மற்றும் மாண்புமிகு சேஷசாயி ஆகியோர் தலைமையிலான அமர்வு, சென்னை கிழக்குப் பகுதி இணை ஆணையர் இந்த வழக்கு விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. 
 

இந்திய தண்டனைச் சட்டம் 171B-யின் கீழான இந்தப் புகாரை மாஜிஸ்திரேட் அனுமதியுடன்தான் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்பதால், 23 ஆவது பெருநகர மாஜிஸ்திரேட்டிடம் முன் அனுமதி பெற்று, சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. ஆனால், அதில் தேர்தல் ஆணையம் தெரிவித்த அமைச்சர் திரு விஜயபாஸ்கர் பெயரும், பணப் பட்டியலில் இடம்பெற்றிருந்த முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெயரும் மறைக்கப்பட்டது. 

 

vijaya bhaskar



இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் தொடர்பே இல்லாத “பி.எம். நரசிம்மன்” என்பவர் தனி நீதிபதியிடம் ஒரு வழக்கைத் தொடுத்து, பெருநகர  மாஜிஸ்திரேட்டிடம் முன் அனுமதி பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதையும் மறைத்து, அதிமுக அரசு தனி நீதிபதி முன்பு வாதாடிய அலங்கோலம் நடந்திருக்கிறது; அற்பப் பொய்கள் அரங்கேறியிருக்கின்றன.
 

“மாஜிஸ்திரேட் அனுமதி பெற்று புகாரின் மீது வழக்கு பதிவு செய்தேன்” என்று முதல் தகவல் அறிக்கையிலேயே காவல்துறை ஆய்வாளர் பதிவு செய்திருந்தும், அதை தனி நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. “மாஜிஸ்திரேட் அனுமதி பெறவில்லை” என்ற காரணத்தைச் சொல்லி, அந்த முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட அதிமுக அரசு ஆணவத்துடன் உயர்நீதிமன்றத்திற்கே தவறான - பொய்யான தகவல் கொடுத்திருக்கிறது. 
 

போலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர், தன் பெயரிலோ தன் அமைச்சர்களின் பெயரிலோ வழக்கு வந்து விடக்கூடாது என்று திட்டமிட்டு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது என்பதையும் தனி நீதிபதியிடமிருந்து மறைத்து, எப்.ஐ.ஆரை ரத்து செய்ய “சதித்திட்டம்” தீட்டியிருப்பது திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மருது கணேஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது இன்று உயர்நீதிமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது; தேர்தல் ஜனநாயக நெறியின் நெஞ்சில், அதிமுக அரசு கொடூரமான  தாக்குதலை நடத்தியிருக்கிறது. 
 

“எப்.ஐ.ஆர்”-ல் தேர்தல் ஆணையமே 21.4.2017 அன்று அளித்த புகாரில் உள்ள அமைச்சர் திரு விஜயபாஸ்கர், திருமதி ரம்யா, திரு ஆர். சின்னத்தம்பி ஆகியோர் பெயர்களும், அத்துடன் இணைக்கப்பட்ட வருமான வரித்துறையில் உள்ள முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்கள் ஏன் இடம்பெறவில்லை? குற்ற எண் 583/27.4.2017-ல் E-4 அபிராமபுரம் காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர் போட்ட போது இந்த பெயர்களை எல்லாம் நீக்கச் சொன்னது யார்? மொட்டையாக ஒரு எப்.ஐ.ஆரை போடவிட்டு தேர்தல் ஆணையம் அமைதி காத்தது ஏன்? குற்றம் சாட்டப்படாத பி.எம். நரசிம்மன் என்பவர் எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரியதை அதிமுக அரசு எப்படி அனுமதித்தது? 

 

highcourt chennai

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த வழக்கைக் கண்காணித்த சென்னை மாநகர இணை போலீஸ் கமிஷனர் என்ன செய்து கொண்டிருந்தார்? உயர்நீதிமன்றமே கண்காணித்த விசாரணையில் தேர்தல் ஆணையம் கோட்டை விட்டது ஏன்? தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டும் தன் மீது எப்.ஐ.ஆர் போட்டு விடாமல் சென்னை மாநகர காவல்துறையை முதலமைச்சர் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? கொடுத்த புகாரை திருத்தி மறைத்து எப்.ஐ.ஆர் போட்ட அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று அடுக்கடுக்கான கேள்விகள் அணி வகுத்து நிற்கின்றன.   
 

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யும் “பணப்பட்டியல்” தொடர்பான புகாரில் செய்யப்பட்டுள்ள முறைகேடுகளுக்கு காரணமாக இருக்கும் முதலமைச்சர், துணை போன போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், சம்பந்தமே இல்லாமல் வழக்குப் போட்டவர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம்  உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

 

mkstalin

குறிப்பாக தேர்தல் ஆணைய புகாரை மறைத்து எப்.ஐ.ஆர் போட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும். இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் குறித்தும் தனியாக துறை ரீதியான விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். 
 


இந்த மன்னிக்க முடியாத குற்றத்திற்கு துணை போனவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஜனநாயக ரீதியிலான தேர்தலின் மீதும் அதற்குப் பொறுப்பான தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களுக்கு நல்லெண்ணமும் நம்பிக்கையும் பிறக்கும் என்பதால் வருமான வரித்துறையின் அறிக்கைப்படியான புகாரின் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.