Advertisment

ஜோக் அடிக்கும் விஜய் களத்திலேயே இல்லை!-பாஜக கூட்டணி குஷியில் ராஜேந்திர பாலாஜி!

Vijay, who jokes, is not in the field! - Rajendra Balaji is happy with the BJP alliance!

சிவகாசியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். “காங்கிரஸ் கட்சி ஆளும்கட்சியாக இருந்த நேரத்தில், ரெய்டுக்குப் பயந்து அந்தக் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்தது ஈழத்தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸுடன் திமுக கூட்டு வைத்துள்ளது. இது ஒவ்வாத ஒப்பாத கூட்டணி. மக்கள் ஏற்றுக் கொள்ளாத கூட்டணி.

Advertisment

அதிமுக-பாஜக கூட்டணி தேர்தலுக்காக அமைந்த சிறப்பான கூட்டணி என்று தேர்தல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். வரவேற்கத்தக்க வெற்றிக்கூட்டணி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். திமுகவைத் தோற்கடிப்பதற்கு யாருடனும் கூட்டு சேர்வோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இந்தக் கூட்டணிக்கு தலைமை அவர்தான். எந்தக் காலத்திலும் திமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று சொன்னவர் வைகோ. வைகோ வைத்துள்ள கூட்டணிதான் சந்தர்ப்பவாத கூட்டணி. இதுபோல் எந்த அரசியல் கட்சி மீதும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் வைத்ததில்லை.

Advertisment

இந்தியாவில் வலுவான அரசு இருக்க வேண்டும், பிரச்சனை இல்லாத அரசாக இருக்கவேண்டும். தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அனைவரிடத்திலும் கலந்துபேசி இந்தக் கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ளார். திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டதால்தான், அவர்கள் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பவர். அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்று அவர் கூறவில்லை. தேர்தல் நேரத்தில்தான் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். அதிமுகவுடன் நெருக்கமாக இருக்கக் கூடியவர் தற்போது பாஜக தலைவர் ஆகியிருக்கிறார். அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். மாதா மாதம் கட்சிகள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் இனி நிகழும்.

பாஜகவுக்காக ஜெயலலிதாவும் ஓட்டு கேட்டுள்ளார். கலைஞரும் ஓட்டு கேட்டுள்ளார். ஸ்டாலினும் ஓட்டு கேட்டுள்ளார். வாஜ்பாயின் பாஜக அமைச்சரவையில் அங்கம் வகித்துவிட்டு, தற்பொழுது புனிதர்களைப் போல ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று திமுக தெரிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

திமுக தனித்து நின்றால் அதிமுகவும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கத் தயார். எடப்பாடி பழனிச்சாமிக்கு தனித்து நிற்கும் திறமை உண்டு. திமுகவிற்கு உண்டா? அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் ஏன் பயப்படுகிறீர்கள். உங்கள் கட்சியிலேயே பல பிரச்சினைகள் இருக்கின்றன. திமுக அமைச்சர்கள் பெண்களைத் தவறாகப் பேசுகிறார்கள். சைவ-வைணவ மதத்தை அமைச்சர் பொன்முடி தவறாகப் பேசுகிறார். முதலில் நீங்கள் உங்களைச் சரிபண்ணிக்கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் நல்லவராக, வல்லவராக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக எப்போதும் அனைவருக்கும் பாதுகாப்பான கட்சியாக இருக்கும். திமுகவுக்கும் தவெகவிற்கும் தான் போட்டியென விஜய் கூறியிருப்பது, 2025ன் அருமையான ஜோக். அதிமுகவிற்கும் திமுகவிற்கும்தான் போட்டி. நான்தான் நான்தான் என்று தவெகவினர், அவர்களாகவே கூறக்கூடாது. தவெகவும் விஜய்யும் களத்திலேயே கிடையாது, களத்தில் நிற்பது திமுகவும் அதிமுகவும்தான். திமுக மதம்கொண்ட யானையாக நிற்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சினம் கொண்ட சிங்கமாக நிற்கிறார். சினம் கொண்ட சிங்கத்திடம் மதம் கொண்ட யானை தோற்று ஓடும்.

அதிமுகவுக்கு சிறுபான்மையினரின் ஓட்டுகள் உறுதியாக வரும். திமுகவை நம்பி நம்பி சிறுபான்மையின மக்கள் கெட்டனர். அதிமுகவை நம்பிய சிறுபான்மையினர் கெட்டதாக வரலாறே கிடையாது. உறுதியாக சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிமுகவிற்கு விழும்” என்றார்.

rajendra balaji edappadi pazhaniswamy admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe