Vijay  request Don't call Ilaya Kamaraj at meet students third phase

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் பாராட்டி நிதியுதவி அளித்து வருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

கடந்த 2 ஆண்டுகளாக முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி நிதியுதவி அளித்து வரும் விஜய், இந்தாண்டும் முதற்கட்டமாக 80 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த மே 30ஆம் தேதியன்று சந்தித்துப் பாராட்டி நிதியுதவி வழங்கினார். அதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஜூன் 4ஆம் தேதியன்று மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து கல்வி விருது வழங்கினார்.

Advertisment

இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் விழா இன்று (13/06/2025) மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு வந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், மாணவர்களுக்கு நிதியுதவியை வழங்கி வருகிறார். நிகழ்ச்சியில் நிதியுதவி பெற்ற மாணவர் ஒருவரின் தந்தை பேசிய போது, ‘2026இல் நம்ம விஜய் சாருக்கு முதலமைச்சர் என்ற பட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர் பொது சேவையில் ஈடுபட்டார், அதே போல் விஜய்காந்த்தும் பொது சேவையில் ஈடுபட்டார். ஆனால், விஜயகாந்த்துக்கு யாரும் ஓட்டு போடவில்லை. ஆனால், கண்டிப்பாக விஜய் சாருக்கு 2026இல் எல்லோரும் ஓட்டு போட்டு முதலமைச்சர் என்ற பட்டத்தை வழங்க வேண்டும்’ என்று பேசினார்.

அப்போது திடீரென மைக்கை வாங்கிய விஜய், “எல்லோருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள். 2026 பத்தியோ, காமராஜர் இளைய காமராஜர் அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நீங்கள் உங்களுடைய ஆசிரியர்கள் பற்றியோ, பள்ளியை பற்றியோ பேசுங்கள். மத்த விஷயங்கள் பற்றி கூட பேசுங்கள், தயவு செய்து அது மாதிரி எல்லாம் பேசாதீங்க” என்றார்.

Advertisment

முன்னதாக நிகழ்ச்சி தொடங்கிய போது பேசிய விஜய், “நேற்று குஜராத்தில் மிகப்பெரிய சோகமான விமான விபத்து நடந்திருக்கிறது. விபத்து தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் போது மனசு பதற்றம் ஆகிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை. இறந்த எல்லோருக்காகவும் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி மெளன அஞ்சலி செலுத்தினார்.