விஜய் சொகுசு கார் விவகாரம்: மேல் முறையீட்டு விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம்..! 

Vijay luxury car affair; High Court suitable for appeal hearing ..!

சொகுசு கார் இறக்குமதிக்கான நுழைவு வரியை ரத்து செய்யக் கோரிய வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து, நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ எனும் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காரை பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகியபோது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காரை இறக்குமதி செய்போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்த இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி ஏற்கனவே பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால்தான், தானும் நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னைப் பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எழுத்து வடிவிலான தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல், ஆன்லைன் தீர்ப்பு நகலை அடிப்படையாக கொண்டு இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டுமென கோரினார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்குப் பட்டியலிட உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்னும் ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor vijay
இதையும் படியுங்கள்
Subscribe