
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறும் ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் இன்று (01.05.2025) மாலை சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரைக்கு வந்தார். இதன் காரணமாக த.வெ.க. தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் மதுரையில் விமான நிலையத்தில் குவிந்தனர். இதனால் மதுரை விமான நிலையத்தில் காலை முதலே கடும் நெரிசல் காணப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நான் இன்னைக்கு போறது ஜனநாயகன் படத்தினுடைய வேலைக்காக போறேன். கொடைக்கானல் ஒரு ஷூட்காக போறேன். கூடிய சீக்கிரமே மதுரை மண்ணுக்குக் கட்சி சார்பா வேற ஒரு சந்தர்ப்பத்துல உங்க எல்லாரையும் மீட் பண்ணி நான் பேசுறேன். இன்னைக்கு ஒரு ஒன் ஹவர்ல நாங்க லேண்ட் ஆகி நான் உங்க எல்லாரையுமே பார்த்துட்டு நான் என் வேலையை பார்க்க போயிடுறேன். நீங்களும் பாதுகாப்பா அவங்க அவங்க வீட்டுக்கு போயிடுங்க. யாரும் என்னுடைய வேனுக்கு பின்னாடியோ, காருக்கு பின்னாடியோ வந்து ஃபாலோ பண்றதோ, இந்த பைக்ல ஃபாஸ்ட்டா வர்றதோ, பைக் மேல நின்னுகிட்டு பைக் ஓட்டுறது, ஹெல்மெட் இல்லாம இந்த மாதிரி எல்லாம் வராதீங்க. ஏன்னா அந்த காட்சி எல்லாம் பாக்குறதுக்கே மனசுக்கு வந்து ரொம்ப பதட்டமா இருக்கு' எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் மதுரை விமான நிலையம் வந்த அவரை அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றதோடு வழக்கத்தைப் போல் வாகனங்கள் மீது ஏறிக் கூச்சலிட்டனர். இந்நிலையில் நடிகர் விஜய் மதுரை விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்தடைந்து விமானத்தில் படிக்கட்டில் இருந்து தரையில் உற்சாகமாக எகிறி குதிக்கும் காட்சியும், விமான நிலைய பணியாளர்கள் விஜய்யை வரவேற்கும் காட்சியும் வெளியாகி வைரலாகி வருகிறது.