கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் 5 பேருடன் தனியார் பள்ளி வேன் ஒன்று இன்று (08.07.2025) காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். அதாவது 6ஆம் வகுப்பு மாணவன் நிமலேஷ், 11ஆம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம் செழியன் என்ற மாணவன் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நடந்த பகுதியில் கேட் கீப்பர் அலட்சியமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதே சமயம் சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டானது, உள்ளிணைப்பு இல்லாத (Non inderlocking) கேட் என்பதால் அதை மூடுவதற்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்படும் என்ற நிலையில், ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடுவதற்கான தகவல் முறையாக அளிக்கப்பட்டதா அல்லது இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும் இந்த விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்தோடு கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் பகுதியில் பணியிலிருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா அலட்சியமாக இருந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் தாக்கியதால் போலீசார் பாதுகாப்புடன் பங்கஜ் சர்மாவை பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனர். அவரிடம் தொடர்ச்சியாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பள்ளி வேனை ஓட்டி வந்த சங்கர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கேட்டை திறந்ததாக பஞ்சஜ் சர்மா வாக்குமூலம் கொடுத்துள்ளார். மற்றொரு புறம் தீவிர சிகிச்சையில் உள்ள வேன் ஓட்டுநர் சங்கர் இதனை மறுத்துள்ளார். கேட் திறந்து இருந்ததால் ரயில் சென்றிருக்கும் என வேனை முன்னோக்கி இயக்கியதாகவும், ரயில் வருவதற்கான சத்தம் வராததால் வேனை இயக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் எக்ஸ் சமூக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.