Skip to main content

“ஆட்சியில் பங்கு என்பதை விஜய் கொச்சைப்படுத்தியுள்ளார்” - கே.எஸ்.அழகிரி

Published on 19/11/2024 | Edited on 19/11/2024
Vijay has denigrated participation in governance said KS Azhagiri

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106 ஆவது பிறந்தநாள் விழா சிதம்பரம் வடக்கு வீதியில் சிதம்பரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் சிதம்பரம் நகர தலைவர் மக்கீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு இந்திராகாந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்திளார்களை சந்தித்து பேசுகையில், “நடிகர் விஜய் அவரது மாநாட்டில் ஆட்சியில் பங்கு எனப் பேசியுள்ளார். அவர் பேசியது சரிதான்; ஆனால் பேசிய விதம் கொச்சைப்படுத்தியுள்ளது.  ஒரு கையில் குச்சி ஐஸ் வைத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது போல் கூறியுள்ளார்.  இந்த செயல் அனைவருக்கும் முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை பேசுவதற்குகான இடம் உள்ளது. ஆட்சியில் பங்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி,  திமுக தலைவர் முக ஸ்டாலின் அமர்ந்து பேசக்கூடியது. அதனை நாம் தீர்மானிக்க முடியாது.

கூட்டணி ஆட்சி என்றால் பணியாற்றுவதற்கு கூடுதல் உத்வேகமாக இருக்கும். மோடி, காங்கிரஸ் 50 சதவீத இடஒதுக்கீட்டை மாற்றிவிடுவார்கள் என்று கூறி வருகிறார். இது தவறானது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து சட்டத்தை திருத்தி  50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீட்டு அளவை வழங்க நடவடிக்கை எடுக்கும். இதுதான் சமூகநீதி.

மணிப்பூர் கலவரத்தை திட்டமிட்டு பாரதிய ஜனதா கட்சி தான் உருவாக்கியது. மெய்தி மற்றும் குக்கி மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி கலவரத்தை உண்டாக்கியவர்கள் அவர்கள் தான்.  தற்போது அது எல்லை மீறிப் போய்விட்டது. இது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.  மோடியும்,  அமித்ஷாவும் மணிப்பூருக்கு செல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு கலவரத்தை அடக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

உத்திர பிரதேசத்தில் அடிக்கடி மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.  பாஜக முதல்வர் ஆதித்யநாத் நிர்வாகத் திறமை இல்லாதவர். அவர் ஒரு பாஸ், முதலாளி ஆகத்தான் செயல்படுவார். அவரை நன்கு எனக்குத் தெரியும்,  அவரிடம் நிர்வாகத் திறமை இல்லை.  எனவே இதற்கு உத்தரப் பிரதேச மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்குப் பாடம் புகட்டுவார்கள்.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் அரசு முன்வந்து போராட்டத்தைச் சமாதானம் செய்தது. இதில் அரசு சரியான முறையில் செயல்பட்டு வருகிறது. சாம்சங் தொழிற்சாலையை இங்கே கொண்டு வரும்போது தொழிற்சங்கங்களை அமைக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்துடன் கொண்டு வந்துள்ளனர்.  தற்போது தொழிற்சங்க அனுமதி வேண்டும் என்றால் மற்றவர்கள் யாரும் தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்க வர மாட்டார்கள்.  எனவே இதனைச் சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.  

இவருடன் கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், மாநில நிர்வாகிகள் ஜெமினி ராதா, மாவட்ட நிர்வாகி சுந்தர் ராஜன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்