Vijay is furious with the TRP district secretary who garlanded E.V.Velu

தமிழக வெற்றி கழகம் ஆளும்கட்சியான திமுகவை எதிர்த்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட விஜய் கட்சி செயலாளர் செய்த செயல் மன்னிப்பு கேட்டு தலைமைக்குக் கடிதம் அனுப்பும் நிலைக்குச் சென்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜய்யின் த.வெ.க.வின் தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் பாரதிதாசன். இவர் திருவண்ணாமலை நகரம் தியாகி அண்ணாமலை நகரில் புதியதாக பங்களா கட்டியுள்ளார். அந்த வீடு குடிபுகும் விழாவுக்கு தனது கட்சியை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் தந்துள்ளார். அதேபோல் கட்சி தலைமைக்கும் அழைப்பிதழ் தந்துள்ளார். வீடு குடிபுகும் விழா ஜீன் 8ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தவெகவின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வருகை தந்துயிருந்தார். அவரின் வருகைக்கு தந்த வரவேற்பை விட இரண்டு மடங்கு வரவேற்பு திமுக தெற்கு மாவட்ட மா.செவும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு தந்தார் என்கிறார்கள் தவெகவினர். இது நடிகர் விஜய்க்கு தெரிந்து, “பதவியில் இருந்து விலகறியா, இல்ல நாங்களே எடுக்கட்டுமா..” என கடுமையாக கேட்க, உடனே பாரதிதாசன் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதை சமூகவலைதளத்தில் வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

அந்த கடிதத்தில், “அமைச்சர் என் குடும்ப நண்பர், அதனால் அழைத்து அவருக்கு தவறுதலாக மாலை அணிவித்துவிட்டேன், இச்செயலுக்கு மனம் வருந்தி தலைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி என் சம்மந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்களைத் தவிர மாற்றுக் கட்சியினரை அழைக்கமாட்டேன் என உறுதியளிக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார்.

Vijay is furious with the TRP district secretary who garlanded E.V.Velu

இதுகுறித்து நம்மிடம் பேசிய தவெகவினர், 25 ஆண்டுக்கும் மேலாக விஜய்யின் மக்கள் இயக்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவராக, இப்போது த.வெ.க.வின் மா.செவாக இருக்கிறார் பாரதிதாசன். விஜய் சாருக்கு நேரடியாக தெரிந்தவர், எஸ்.ஏ.சந்தரசேகர் மன்ற நிர்வாகத்தை கவனித்தபோது, அவரின் செல்லப்பிள்ளைப்போல் இருந்துவந்தார் இவர். இவரது சகோதரி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர். 2001 – 2006ல் அதிமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுடன் நெருக்கமாக இருந்தார். அதிமுக பின்புலத்தில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிஸம் செய்துவந்தார். அப்போது மங்களம் நூக்காம்பாடி கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கொலைவழக்கில் நேரடியாக சம்மந்தப்பட்டு சிறைச்சென்ற பாரதியை என்கவுண்டரில் இருந்து அரசியல் பின்புலத்தால் காப்பாற்றப்பட்டார்.

Advertisment

கொலை குற்றச்சாட்டு இருந்தும் விஜய் இவரை மன்றத்தில் இருந்து நீக்கவில்லை. அந்தளவுக்கு தலைமை இவரை அரவணைத்தது. தற்போது கட்சி ஆரம்பிக்கப்பட்டு திமுக – பாஜகவை எதிர்த்து வருகிறார் எங்கள் தலைவர். அப்படிப்பட்ட நிலையில் அமைச்சர் வேலுவை தன் இல்ல நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார். அவரைப்போல் மாற்றுக்கட்சியில் இருந்து பலரையும் அழைத்துள்ளார், அவர்களும் வந்து சென்றார்கள். அவர்களை அழைத்ததை நாங்களோ, எங்கள் கட்சி தலைமையோ தவறு எனச்சொல்லவில்லை. எங்கள் கட்சி பொதுச்செயலாளர் ஆனந்துக்கு தந்த வரவேற்பை விட இரண்டு மடங்கான வரவேற்பு அமைச்சருக்கு தந்தார். தெரு முனையில் இருந்து அவரின் காரை வீடு வரை செக்யூரிட்டிப்போல் முன் நின்று அழைத்துச்சென்று மயில் தோகை மாலை, பணமாலை, மலர் மாலை என அமைச்சருக்கு 3 விதமான மாலைகளை அடுத்தடுத்துப்போட்டு அவரின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினார். இதுதான் எங்கள் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுக்குறித்தான தகவல் மற்றும் போட்டோ – வீடியோ தலைவர், பொதுச்செயலாளர் கவனத்துக்கு சென்றதும் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் திமுக மா.செ, திமுக தலைமைக்கு நெருக்கமானவரான அமைச்சர் வேலுவுக்கு இப்படி முக்கியத்தும் தருகிறார் என்றால் தேர்தலில் நம்கட்சிக்கு எப்படி மா.செ வேலைப்பார்ப்பார் என கேள்வி எழுந்தது. இதைக்குறித்தே தலைமையில் இருந்து இவரிடம் கடுமையாக கேள்விக்கேட்டு பேசியதாலே இப்போது மன்னிப்பு கேட்டு கடிதம் தந்துள்ளார் என விளக்கமாக சொன்னார்கள் தவெக நிர்வாகிகள்.

மா.செ பாரதிதாசன் தரப்பிலோ, எங்கள் மாமா தண்டராம்பட்டு எல்.ஐ.சி வேலு, திமுகவின் ஆதிதிராவிடர் அணி மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இருகுடும்பத்துக்கும் பெண் குடுத்து பெண் எடுத்துள்ளோம். அந்த அடிப்படையில் அமைச்சர் வந்தார் என்கிறார்கள்.

திமுக நிர்வாகிகளோ, அமைச்சரை சந்தித்து பாரதி பத்திரிக்கை வைத்து நிகழ்ச்சிக்கு அழைத்தபோதே பெரிய ‘எல்’ தொகை அவருக்கு பரிசாக தந்தார். அதில் மயங்கிய பாரதிதாசன் விழாவுக்கு வந்த அமைச்சருக்கு பெரிய மரியாதை செய்துவிட்டார். இதனை நாங்களே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

Vijay is furious with the TRP district secretary who garlanded E.V.Velu

இந்த பிரச்சனை குறித்து கோவை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அவர் என் தொகுதி வாக்காளர், அவரே கடந்த தேர்தலில் எனக்கு வாக்களித்தவர். அவர்களுடையது கூட்டுக் குடும்பம், அவருடைய அண்ணன் தம்பிகள் திமுகவில் பயணிக்கிறார்கள். அது எனக்கு நெருக்கமான குடும்பம். அவரும் எனக்கு நெருக்கம். என்னை மதித்து பத்திரிக்கை வைத்தார்கள், நான் பொதுவாக கட்சி பார்ப்பதில்லை, என் தொகுதி வாக்காளர்கள் யார் வந்து அழைப்பிதழ் தந்தாலும் செல்வேன், அதன்படியே சென்றேன்” என்றார்.